25 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த 8 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட பஸ் தரிப்பு நிலையம் நீரில் மூழ்கியுள்ளது.
நீர் வழங்கல், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நகர அபிவிருத்தி அதிகார சபையின்
அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்ட பஸ்தரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன் கடந்த 8 ஆம் திகதி பஸ் தரிப்பிடத்தை திறந்து வைத்தார்.
முல்லைத்தீவு மாவட்ட பஸ் தரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு முதற்கட்டமாக 25 மில்லியன் ரூபா செலவில் பஸ் தரிப்பிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
எனினும், நேற்றிரவு பெய்த மழைக்கு பின்னர் முல்லைத்தீவு மாவட்ட பஸ் தரிப்பு நிலையம் வௌ்ளத்தில் மூழ்கிக் காட்சியளிக்கிறது.
பஸ் தரிப்பிட நிர்மாணத்தில் பல குறைபாடுகள் இருப்பதால், அதனை நிவர்த்தி செய்துவிட்டு கையளிக்குமாறு நகர திட்டமிடல் அதிகார சபையிடம் கோரியுள்ளதாக கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ். தவராசா தெரிவித்தார்.