முல்லைத்தீவு – மாங்குளம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள சந்தை வளாகத்தை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் மையமாக காணப்படும் மாங்குளத்தில் இருக்கின்ற இச்சந்தை வளாகம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காலங்களில் மழைநீர் தேங்கி நின்று சேரும் சகதியுமாக காணப்படுவதோடு, பல்வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதோடு, வளாகத்தின் ஒரு பகுதியில் நீர் தேங்கி நிற்கிறது.
ஏனைய பகுதியில் புற்கள் பற்றைகளாக காணப்படுகிறது. இவற்றை சீர்செய்து சுகாதாரமான ஒரு சூழலில் இயங்கும் சந்தையாக மாற்றித் தருமாறும் மக்கள் கோருகின்றனர்.
இதேவேளை குறித்த சந்தைக்கான வீதியும் புனரமைப்பு செய்யப்பட வேண்டுமெனவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் இந்த விடயத்தை கருத்தில் கொள்ளவேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந்திடம் வினவிய போது,
“தற்போதைய மழை சூழலில் வேலைகளை திறம்பட செய்யமுடியாது எனவும் குறித்த சந்தை மற்றும் வீதி திருத்த வேலைகளுக்காக 3.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அடுத்த ஆண்டில் அந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்” எனவும் தெரிவித்தார்.