Breaking
Fri. Nov 22nd, 2024

கடும் வெயிலால் முல்லைத்தீவு மல்லாவி ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மடிந்துள்ளதால், அந்த மீன்களை பலர் சேகரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

மல்லாவி மக்கள் இறந்த மீன்களை சேகரித்து மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும், எனவே உடனடியாக மீன்களை விற்பனை செய்ய பொலிஸார் அனுமதிக்கக் கூடாது எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, மல்லாவி குளத்தில் மீன் விற்பனை செய்பவர்களை கைது செய்ய பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு சுகாதார அதிகாரிகள் மல்லாவி ஏரிக்கு சென்று மீன்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், முதற்கட்டமாக அதிக சூரிய ஒளியினால் மீன்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் ஊகிக்கின்றனர்.

இறந்த மீன்களின் மாதிரிகளை எடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கும் வரை மல்லாவி ஏரியின் மீன்களை சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் முல்லைத்தீவு விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகள், ஏரிகளின் நீர் மட்டம் தொடர்பில் மீன்பிடி விரிவாக்க உத்தியோகத்தர்கள் அக்கறை காட்டாது இலட்சக்கணக்கான மீன்களை ஏரிகளில் விடுவதால் இலட்சக்கணக்கான மீன்கள் செத்து மடிவதாக தெரிவிக்கின்றனர்.

எனினும் மீன்கள் இறந்து கிடப்பதால் மல்லாவி குளத்தை சுற்றியுள்ள பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

A B

By A B

Related Post