பிராந்திய செய்திமன்னார்முல்லைத்தீவு

முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவு அமைக்க 60.5 மில்லியன் ரூபா அறிக்கை தயார்.!

முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் கரைதுறைப்பற்று பிரதேச சபை அதிகார பிரதேசம் மற்றும் மன்னார் நகர சபை அதிகார பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்பு பிரிவு அமைப்பதற்காக உலக வங்கியின் உதவியுடன் 60.5 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நிலையியல் கட்டளை 27/ 2 இன் கீழ் கேள்வியெழுப்பி உரையாற்றிய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

27/2 இன் கீழ் கேள்விகளை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

முல்லைத்தீவு மன்னார் பிரதேசங்களில் தீயணைப்பு படை என்பதொன்று இல்லை. முல்லைத்தீவு நிலப்பரப்பில் பெரிய மாவட்டமாக இருக்கின்ற நிலையில் அங்கு மக்கள் தீயால் பாதிக்கப்படுகின்ற போது அல்லது கடைத் தொகுதிகள் எரியும் போது யாழ்ப்பாணம் அல்லது வவுனியாவில் இருந்தே தீயணைப்பு வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. 

அவ்வாறு செல்லும் போது அங்கிருந்த உடமைகள் அழியும் நிலைமை உள்ளது. இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு படையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த அரசாங்கத்திடம் முன்வைத்திருந்த போதும் இன்னும் அது நடக்கவில்லை. அதனால் புதிய அரசாங்கத்திடம் அந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கடைகள் பல தீக்கிரையான பின்னரே வவுனியாவில் இருந்து தீயணைப்பு படை வருகின்றது. இந்த மாவட்டத்திலும் தீயணைப்பு படை இல்லாமையினால் அங்குள்ள மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் குறித்த மாவட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.

இதற்கு பதிலளித்த பொதுநிருவாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் முன்வைத்த விடயம் சரியானதே. மன்னாரில் மட்டுமன்றி நாட்டில் இன்னும் பல பிரதேசங்களில் நிலவும் பிரச்சினையாக உள்ளது. 

அவர் முன்வைத்துள்ள பிரச்சினை தொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். உள்ளூராட்சி நிறுவனங்களில் தீயணைப்புக்காக மத்திய அரசாங்கத்தினால் நிதியை வழங்குமாறு தொடர்ச்சியாக கோரிகக்கை முன்வைக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் தேவையான உபகரணங்கள் கொரிய அரசாங்கத்தினால் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் கரைதுறைப்பற்று பிரதேச சபை அதிகார பிரதேசம் மற்றும் மன்னார் நகர சபை அதிகார பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்பு பிரிவை அமைப்பதற்காக உலக வங்கியின் உதவியுடன் 60.5 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கூடிய விரைவில் அவை அமைக்கப்படும் என்றார்.

Related posts

நானாட்டான் பிரதேச செயலக காணி போதனாசிரியரின் காணி கொள்ளையில் கிராம சேவையாளருக்கு தொடர்பு! வெளிவரும் உண்மைகள்

wpengine

மைத்திரிபால சிறிசேன இனவாதியோ அல்லது சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைப்பவரோ அல்ல- காதர் மஸ்தான் (பா.உ)

wpengine

மஹிந்த ராஜபக்ஷ அரசமைத்தால் மாத்திரமே முஸ்லிம்கள் இருப்பு உறுதி செய்யப்படும் – அஹமட் புர்கான்

wpengine