(சுஐப் எம்.காசிம்)
முல்லைத்தீவு மக்களை நாம் ஒருபோதும் மறவோம். எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் அவர்கள் எனக்கு உதவி இருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இவ்வாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா குருமண்காட்டில் முல்லைத்தீவு மக்களுடனான சந்திப்பின் போது உரையாற்றிய அவர் கூறியதாவது,
நான் மன்னார் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டிருந்தபோதும், வன்னி மாவட்டத்தின் பிரதிநிதி என்ற வகையில் வவுனியா, முல்லைத்தீவு மக்களுக்கும் பணிபுரிய கடமைப்பட்டவன். அந்த மாவட்ட மக்களுக்கும் நான் உரித்துடையவனே. நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். தேர்தல் காலத்தில் நான் இந்த மாவட்டங்களுக்கு வருகின்ற போது மக்கள் அலையலையாக திரண்டு வருவர்.
எனினும் வாக்குகளை எண்ணிப் பார்க்கும்போது மக்கள் திரண்டளவுக்கு வாக்குகள் குறைவாகத்தான் இருக்கும். எனினும் இன, மத பேதமின்றி உங்களுக்கு நான் பணியாற்றியவன். இப்போதும் நான் அவ்வாறே உங்களுக்கு உதவி வருவது உங்கள் மனச்சாட்சிக்கு தெரியும். நான் எனது அரசியல் வாழ்வில் இந்த மாவட்டத்தில் கற்ற பாடங்கள் அநேகம். பெற்ற அனுபவங்கள் நிறைய. எனக்கு நீங்கள் தேர்தலில் வாக்களித்தீர்களோ வாக்களிக்க,வில்லையோ நான் உங்களுக்கு உதவுவேன். எனக்கு ஆதரவு அளித்தவர்களையும் நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்.
முல்லைத்தீவு மக்களுக்கு பணியாற்றும் விடயத்தில் நான் ஒருபோதும் அநீதி இழைத்ததில்லை. மனச்சாட்சிப்படி நடந்து வருகின்றேன். யுத்தத்தின் கெடுபிடிக்குள் அகப்பட்டு நீங்கள் வவுனியாவுக்கு உடுத்த உடையுடன் ஓடோடி வந்ததை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள். உங்களைப் போன்று நானும் அகதியாக ஓடி வந்ததனால், அந்த வேதனைகளை எண்ணி உங்களுக்கு உதவ நானும் உங்களை நாடி வந்தேன்.
அமைச்சர் என்பதற்கு அப்பால் மனித நேயமுள்ள, மனச்சாட்சி உள்ள ஒருவன் என்ற வகையில், எனக்கு அப்போது கிடைத்திருந்த அந்தப் பதவியை எவ்வளவு உச்சக் கட்டத்துக்கு பயன்படுத்த முடியுமோ அந்தளவுக்கு உபயோகித்தேன். அந்த வேளையில் உங்களை நாடி எவரும் வந்திருக்கவில்லை. உங்களுக்காக இப்போது பரிந்து பேசுபவர்கள் எவரும் உங்கள் கஷ்டங்களுக்கு துணை நிற்கவில்லை. ஏச்சுப், பேச்சுகளுக்கு மத்தியிலே நான் உங்களுக்கு உதவி செய்து உங்களை மீள்குடியேற்ற உதவி இருக்கின்றேன்.
அதேபோன்று இனிவரும் காலங்களிலும் உங்கள் இன்ப துன்பங்களில் பங்கேற்று, உங்கள் கஷ்டங்களை நிவர்த்திக்க பாடுபடுவேன். இவ்வாறு அமைச்சர் றிசாத் கூறினார்.