பிரதான செய்திகள்

முல்லைத்தீவில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்ள கடும் முயற்சி அமைச்சர் றிஷாட்

(அமைச்சரின் ஊடகப்பிரிவு)

வடக்கு மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள், அந்த மக்களுக்கு எங்களால் மேற்கொள்கின்ற அபிவிருத்திகளை முடக்குவதில் முனைப்பாக இருக்கின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு முல்லைத்தீவில் நேற்று (04) இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

உள்ளுராட்சி தேர்தலை பொறுத்தவரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அது ஒரு முக்கிய தேர்தலாகவே நாம் கருதுகின்றோம். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்த மாவட்டத்தில் தமிழர் ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக்க வேண்டுமென எமது கட்சியின் சார்பில் நாங்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை.

மத்திய அரசாங்கத்தின் ஆட்சியில் முக்கிய வகிபாகம் வகிக்கும் ஐக்கிய தேசிய கட்சியுடனும், மத்திய அரசாங்க அமைச்சர்களுடனும் நேரடி தொடர்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு, இந்த தேர்தலில் ஐ.தே.க முன்னணியில் நமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதன் மூலமே கிடைக்கின்றது.

மத்திய அரசாங்கத்தையும், கிராமங்களையும் நேரடியாக இணைக்கும் சந்தர்ப்பமாகவும் மக்களின் அடிநாதப்பிரச்சினைகளான, வீடில்லாத பிரச்சினை, பாதை பிரச்சினை, வாழ்வாதார பிரச்சினை மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகளை தீர்க்கின்ற ஒரு களமாகவும் இந்த உள்ளுராட்சி தேர்தல் அமைகின்றது.

கடந்த காலங்களில் தமிழர்களின் உரிமை போராட்டத்தை முன்நிறுத்தி, முதன்மைப்படுத்தி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் வாக்கு கேட்டதனால், இங்கு வாழ்கின்ற தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து, மக்கள் மன்றங்களிலே அவர்களை அனுப்பினர். ஆனால், இந்த குட்டித் தேர்தலில் அவ்வாறான உரிமை கோஷங்களை முன்வைத்து மேற்கொள்ளப்படும் பிரசாரங்களால், நீங்கள் ஏமாந்தீர்களேயானால், அன்றாட வாழ்வில் தேவைகளுக்காக போராடிவரும் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகவே நாம் கருதுகின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டம் யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒன்று. யுத்தம் முடிந்தவுடன் நாங்கள் இந்தப் பிரதேசத்திற்கு வந்தபோது, சுடுகாடாகவும், மயானமாகவுமே காட்சி தந்தது. வாகனங்கள் அரைகுறையாகவும் முற்றாகவும் எரிந்த நிலையிலே காணப்பட்டன. பாதைகள் பயணம் செய்யமுடியாத வகையில் முற்றாக சேதமடைந்து காணப்பட்டன. வீடுகளும், கட்டிடங்களும் கூரைகள் இல்லாமல் சுவர்களை மாத்திரம் கொண்டிருந்தன. மின்சாரம் இல்லை இந்த நிலையில் அந்த அழிவை பார்த்த போது மீளக்கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை அப்போது எமக்கு இருக்கவில்லை.

மாகாண சபையோ, உள்ளுராட்சி சபையோ எதுவுமே இல்லாத நிலையில், அமைச்சர் பதவி அதிகாரத்தை கொண்டும், மாவட்ட அபிவிருத்திச் சபையின் தலைவர் என்ற அதிகாரத்தைக் கொண்டும் இறைவனை முன்னிறுத்தி மீளக்கட்டியெழுப்பும் முயற்சிகளை மேற்கொண்டோம். குறுகிய காலத்தில் சுமார் 15000 வீடுகளை அமைக்க முடிந்தது. 20000 காணிகளுக்கு உறுதிகளை பெற்றுக்கொடுத்தோம். முல்லைத்தீவு பாதைகளை கொழும்பு பாதைகளுக்கு சரிநிகராக அமைத்துக் கொடுத்துள்ளோம்.

எந்த எதிர்பார்ப்பும் இன்றியே நாம் இதனை மேற்கொண்டிருக்கின்றோம். ஆனால் காலத்தின் மாற்றங்களால் எமது அபிவிருத்தி நடவடிக்கைகளை சிலர் மறந்து பேசலாம். எனினும், இதய சுத்தியாகவும், நேர்மையாகவும் எமது பணிகளை இன, மத பேதமின்றி முன்னெடுத்திருக்கின்றோம் என்ற திருப்தி எமக்குள்ளது என்று கூறினார்.

 

Related posts

தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலக தயார்! இராஜாங்க அமைச்சர் நிமல்

wpengine

ஒலுவில் மு.கா முக்கியஸ்தரான ஆசிரியர் ஹமீட் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்!

wpengine

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு! ஓட்டமாவடியில் ஆர்ப்பாட்டம்

wpengine