(சுஐப் எம் காசிம்)
வடக்கு முதலமைச்சர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு மேற்கொண்ட சேவைகளைக் காட்டிலும், தானும் தனது அணியும் மிகவும் நேர்மையான முறையில் கனதியான, காத்திரமான அதிகளவு பணிகளை செய்துள்ளதாக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாட் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, முள்ளியவளை நீராவிப்பிட்டியில் மீள்குடியேற்ற விசேட செயலணி ஊடாக வீடமைப்புக்கான நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாகிர், மீள் குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் யாசீன், மீள் குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் றிபாய் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் கூறியதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து யுத்தத்தினால் வெளியேறிய சகோதர தமிழ்த் மக்களை மீள் குடியேற்றச் செய்வதிலும் இந்தப் பிரதேசத்தில் உடைந்து போய்க்கிடந்த, அழிந்து போயிருந்த அத்தனை கட்டங்களையும் மீளக்கட்டியெழுப்பி தமிழ் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி நிம்மதியாக வாழ வேண்டுமென்பதில் முழுமூச்சுடன் உழைத்திருக்கின்றேன்.
இங்குள்ள கட்டடங்களும் குளங்களும் அபிவிருததிப் பணிகளும் இதற்குத் சான்றுகளாகும். வரலாறு ஒன்று எழுதப்படுகின்ற போது இந்த யதாரத்தம் பதியப்படுமென்பதிலும் எனக்கு நம்பிக்கையுள்ளது. ஆனால் சிலர் யதார்த்தங்களை மறந்து பேசுகிறார்கள், பொய்யை உண்மையாக்குகிறார்கள். உண்மையைப் பொய்யாக்குகின்றார்கள் மனிதாபிமானத்தையும் மனச்சாட்சியையும் அடகு வைத்து அரசியல் நடத்துகின்றார்கள்.
தமிழர்களுக்கு அதியுச்ச அதிகாரம் வேண்டுமென கோருபவர்கள், சமஷ்டிதான் தீர்வு என வலியுறுத்துபவர்கள், வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென விடாப்பிடியாக நிற்பவர்கள் இங்கு வாழ்ந்த சகோதர முஸ்லிம்களை எட்டி உதைக்கின்றார்கள். இவ்வாறு செய்வற்கு அவர்களுக்கு ‘வெட்கம் இல்லையா?’ எனப் பகிரங்கமாகக் கேட்க விரும்புகின்றேன்.
ஆயுததாரிகள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து துரத்திய போது பேசாமடந்தகளாகவும் மௌனிகளாகவும் வாய்மூடி இருந்த நீங்கள், அவர்களின் தியாகத்தினால் இன்று அரசியல் செய்யும் நீங்கள், புலிகள் செய்தது தவறு என்று அவர்கள் இல்லாத போது இப்போது கூறும் நீங்கள், முஸ்லிம்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பி வரும்போது விரட்டுகின்றீர்களே. துரத்தப்பட்ட மக்களை அரவணைப்பதற்குப் பதிலாக கொடுமைப்படுத்துகின்றீர்களே.
புலிகள் செய்த தவறை நாங்கள் மறக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டீர்கள். இந்த 25 வருட காலமாக துரத்தப்பட்ட மக்கள் தென்னிலங்கையிலிருந்த போது உங்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலோ உங்களது உரிமைகளை நசுக்கும் வகையிலோ எப்போதாவது நடந்திருக்கிறார்களா? அவர்கள் அகதியாக வாழ்ந்த போதும் உங்கள் மீது அன்புதான் பாராட்டினார்கள்.
‘முல்லைத்தீவுக்கு றிஷாட் என்ன செய்தார்?’ என்று ஆர்ப்பாட்டங்களில் கேட்டுக்கொண்டிராமல் உங்கள் மனச்சாட்சியிடம் கேளுங்கள். என்னுடன் இணைந்து பணியாற்றிய, மக்கள் ஆணை பெற்ற மனிநேயம் கொண்ட சிலரிடம் சென்று கேட்டுப்பாருங்கள்.
இனவாதத்தையே உங்கள் மூலதனமாகக்கொண்டு உங்கள் அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள நினைக்கும் உங்களைப் போன்றவர்கள் இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கவிடாது, பிச்சைக்காரனின் புண்போல அதனை வைத்திருக்க வேண்டுமென்று எண்ணுகின்றீர்கள்.
உங்களது பிள்ளைகளும் குடும்பங்களும் லண்டனிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நிம்மதியாக வாழ வேண்டும், இங்குள்ள தமிழர்களும் சிங்களவர்களும், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரோடு ஒருவர் அடிபட்டு வதைபட்டுச் சாக வேண்டும். அதன் மூலமே உங்கள் அரசியல் வாழ்வு நீடிக்க முடியுமென நீங்கள் செயலாற்றுகின்றீர்கள். தேர்தல் வந்தால் எந்தத் தியாகமும் செய்யாமல் இனவாதக்கருத்துக்களால் மக்களை உசுப்பி, நடந்து முடிந்த துன்பியல் சம்பவங்களை நினைவூட்டி அரசியல் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை தயவு செய்து கைவிடுங்கள்.
முல்லைத்தீவுக்கு குடியேற வந்த பரம்பரை முஸ்லிம்களை ‘வந்தான் வரத்தான்’ எனவும், காடுபிடிக்க வந்தவர்கள் எனவும், காட்டை அழிக்க எண்ணுபவர்கள் எனவும் ஊடகங்களிடம் காட்டி மக்களை பிழையாக வழிநடத்தும் உங்கள் குரோத எண்ணங்களை தயவு செய்து கைவிடுங்கள்.
மனிதநேயம் கொண்ட அமரர் அன்டன் ஜெகநாதன் போன்றவர்கள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அதீத அக்கறை காட்டியவர்கள். எங்களை மனதார நேசித்தவர்கள். எனினும் வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் நாம் எடுத்த முயற்சிகள் கைகூடாததனால், எமது எதிர் பார்ப்புக்கள் எதுவுமே நிறைவேற்றப்படாததனால் அரசாங்கததின் உதவியுடன் மீள்குடியேற்ற செயலணி உருவாக்கப்பட்டது. இது யாருக்கும் எதிரானதல்ல. நீண்ட கால அகதிகளுக்கு விமோசனம் பெற்றுக்கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த செயலணியை ஆரம்பத்திலிருந்தே இயங்க விடாமல் ஒரு சில அரசியல்வாதிகள் தடுத்தனர். அதன் உச்சக்கட்ட வெளிப்பாடே யாழ்ப்பாணத்திலிருந்து பஸ்கள் மூலம் ஆட்களை முல்லைத்தீவுக்கு கூட்டிவந்து இந்த மக்களுக்கும் எனக்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்தியமையாகும். என்னுடைய முகம் தெரியாதவர்கள் கூட, எனது பெயரைக் கூறி கூழாமுறிப்பில் ‘றிஷாட் காட்டை அழிக்கின்றார்’ என்று கோஷமிட்டனர்.
மரக்கூட்டுத்தாபனம் சில மரங்களை வெட்டி எடுத்துச் சென்றதை என் தலையில் சுமத்தி இத்தனை நாடகங்களையும் நடாத்தினர்.
எனவே தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைப்பதற்கு இங்குள்ள இரண்டு சமூக மக்களும் துணை போக்கூடாது என்பதே எனது உருக்கமான வேண்டுகோளாகும். இவ்வாறு அமைச்சர் றிஷாட் கூறினார்.