முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது
“சகோ. முகம்மத் இக்பால் உட்கசடுகளை தாண்டிய பார்வைக்கு திரும்ப வேண்டும்.” என்ற தலைப்பில் நான் எழுதிய அரசியல் விமர்சன கட்டுரைக்கு தங்களின் பார்வையில் விமர்சனம் செய்துள்ளீர்கள்.
தனிநபர் சார்ந்த தங்களது விமர்சனத்தினை முற்றாக நிராகரிக்கின்றேன். ஏனெனில் தங்களது பார்வைக்கு எனது விமர்சனம் உட்கசடாக தெரிந்திருக்கலாம். ஆனால் எனது சமூகப்பார்வைக்கு அது மிகச்சரியானது.
நாங்கள் மரணிக்கும்போது உட்கசடுகளை சுமந்தவர்களாக மரணிக்க கூடாது. எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர்களாக பழகிக்கொள்ள வேண்டுமென்ற கொள்கை உள்ளவன் என்ற அடிப்படையில் எனது கருத்துக்கள் சமூகம் சார்ந்தவையாக தொடர்ந்து வெளிப்படும் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்.
அரசியல்வாதிகளின் பார்வைகள் எப்போதும் தேர்தல்களை நோக்கியதாகவே இருக்கும். அதனால் சமூகத்தை மறந்துவிடுவார்கள். ஆனால் நான் அரசியல்வாதியல்ல அதனால் சமூகத்தினை மறந்துவிடவில்லை.
உங்களது விமர்சனத்தில், மருதமுனையில் தலைவரின் உரையில் ““#உள்ளக #மீளாய்வு #மற்றும் #சுயவிமர்சனம்”” போன்றவற்றை மட்டுமே குறிப்பிட்டு காண்பித்துள்ளீர்கள்.
ஆனால் தலைவர் கூறிய ஏனைய கருத்துக்களான “”#கூலிக்கு #அமர்த்தப்பட்ட #குழு #உருவாக்கம் #சமூகத்திடம் #சகிப்புத்தன்மை #இல்லை #புரிந்துணர்வு”” போன்ற வசனங்களை சுட்டிக்காட்ட தவறிவிட்டீர்கள். மனிதன் என்ற அடிப்படையில் அதனை நீங்கள் குறிப்பிட மறந்திருக்கலாம்.
எனது விமர்சனத்தில் உள்ள உண்மை தன்மையையும், யதார்த்தத்தினையும் நீங்கள் புரியாதவரல்ல. அத்துடன் சஹ்ரான் குழு பற்றி பல சந்தர்ப்பங்களில் முன்னுக்குப்பின் முரணாக தலைவர் பேசிவருகின்றதனை நீங்கள் அறியாமலுமல்ல.
உங்களுக்கு எல்லாம் புரியும். உங்களது உள் மனது அதனை படம்பிடித்து காண்பித்திருக்கும். ஏதோ ஒன்று உங்களை தடுக்கின்றதன் காரணமாக வெளிப்படியாக மறுக்கின்றீர்கள்.
தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு எதிராக விமர்சனங்கள் வருகின்றபோது அல்லது தலைவரின் பிழைகளை மூடி மறைப்பதற்காக அல்லது தலைவருக்கு வக்காலத்து வாங்குவதற்காக விழுந்தடித்துக்கொண்டு கட்டுரைகள் வரைந்ததில் என்னைவிட யாரும் முன்னிலை வகித்திருக்க முடியாது.
இதற்காக வெப்சைட், லைக் பேஜ்கள் உருவாக்கி எங்களது சொந்த பணம், காலம், நேரங்களை செலவழித்து கட்சிக்காகவும், தலைவருக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டபோது அதற்காக ஒரு தடவையாவது நீங்கள் எங்களுக்கு உற்சாகம் தராதது கவலைதான்.
அவ்வாறு நாங்கள் தீவிரமாக ஊடக செயல்பாட்டினை மேற்கொண்டபோது அதில் பொறாமைகொண்ட பலர் அதனை தடுக்கும் விதத்தில் அதற்கெதிராக கட்சியின் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களும், கட்சி பிரமுகர்களும் தலைவருக்கு அழுத்தம் வளங்கியதையும் நாங்கள் அறியாதவர்களல்ல.
அதுமட்டுமல்லாது 2001 இல் சாய்ந்தமருது ஜும்மாஹ் பள்ளிவாசலுக்கு முன்பாக இணைத் தலைமைத்துவத்திலிருந்து பேரியல் அஷ்ரப் அவர்களை விரட்டி தனித் தலைவராக ரவுப் ஹக்கீம் அவர்களை நியமிக்க போராடிய கூட்டத்தில் நானும் ஒருவன். அத்துடன் அதன் பிற்பாடுகளில் கட்சிக்கான எனது செயல்பாடுகள் மிக நீண்டது என்பதனை நினைவூட்டிக்கொள்கிறேன்.
““அவருக்கும் தலைமைக்கும் கசந்த இடம் எது என்பது எனக்கு தெரியும்”” என்று அரசியல்வாதிகளுக்கு உரித்தான சங்கேத பாசையில் குறிப்பிட்டுள்ளீர்கள். மறைப்பதற்கு எதுவுமில்லை. நீங்கள் அதனை வெளிப்படையாக கூறலாம். அப்போதுதான் எனக்கும் அந்த கசந்த இடத்தினை அறிந்துகொள்ள இலகுவாக இருக்கும்.
எனவே என்னை நீங்கள் எந்த இடத்திலும் ஜீரணிக்க தேவையில்லை. சமூகம் சார்ந்த எனது நடுநிலையான விமர்சனம் தொடர்ந்துகொண்டே இருக்கும். சமூகத்தை யார் காட்டிக்கொடுத்து மக்களை ஏமாற்றி மேட்டுக்குடி அரசியல் செய்கின்றார்களோ, அதனை விமர்சிப்பதில் எந்த தவறுமில்லை.
றிசாத் பதியுதீன் அமைச்சராக இருந்த காலத்தில் அவரது பணம், அதிகார பலத்துடன் ஏராளமான போலி முகநூல்களின் விமர்சனங்களை எதிர்கொண்டு தலைவருக்காக செயல்பட்டேன் என்பதனை இங்கே நினைவூட்டிக்கொள்கிறேன்.
எனவே மாகாணசபை தேர்தல் பற்றி பேசப்படுகின்ற இன்றைய காலத்தில், உங்கள் பார்வையில் என்னைப் போன்ற third class எழுத்தாளர்களை விமர்சிப்பதற்கு நேரத்தை செலவிடுவதனை தவிர்த்து, சமூக அரசியல் பற்றிய போதிய அறிவுள்ள நீங்கள், எதிர்வருகின்ற தேர்தலில் வெற்றிபெற்று உங்களது சமூக அரசியல் பணியை தொடர வேண்டுமென்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.