முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஊடாக வவுனியாவில் 94 இந்துக் கோவில்களுக்கும், 24 கிறிஸ்தவ சபைகளுக்கும், விகாரைகளுக்கும் புனரமைப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரின் இணைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான அப்துல்பாரி தெரிவித்துள்ளார்.
வவுனியா, சோயா வீதி இயேசு இரட்சிக்கிறார் தேவாலயத்திற்கு முன்னால் நீண்டகால மீள்குடியேற்ற அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களால் தேவாலய புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட 3 இலட்சம் ரூபாய் நிதியை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த சபைக்கு முதல் கட்டமாக மூன்று இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை ஒரளவு குறைவடைந்து இருந்தாலும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களே ஒரு இனவாதியாகவும், மதவாதியாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் அவர் இனவாதியாக இருந்திருந்தால் இவ்வாறான சபைக்கோ அல்லது இந்து கோவிலுக்கோ நிதியை ஒதுக்கியிருக்கமாட்டார்.
இதுமாத்திரமல்ல 24 சபைகளுக்கு நிதி தரும்படி கேட்டிருக்கிறார்கள். அதனை பரிசீலனை செய்து அவர்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 94 இந்துக் கோவில்களுக்கும், பௌத்த கோவில்கள், பள்ளிவாசல்கள் என்பவற்றுக்கும் வேறுபாடின்றி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இன, மத பேதமின்றி அவர் செயற்படுகின்றார் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர் லரீப், மதபோதகர், தேவாலய பங்கு மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.