நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பிக்குமிடையில் கடும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிந்தது.
சபாநாயகர் தலைமையில் நடந்த இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், சிறைவைக்கப்பட்டுள்ள ரிசாட் பதியுதீன் எம்.பி. தொடர்பில் சர்ச்சை எழுந்தது.
அப்போது ரிஷாட் தொடர்பில் சட்டமா அதிபர் அனுப்பிய குறிப்பொன்று தொடர்பில் சபாநாயகர் விளக்கியுள்ளார்.
அதன்போது கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன் எம் பி , பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எம்.பி. ஒருவர் கைது செய்யப்பட்டதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டாலும் அவர் என்ன குற்றம் செய்தார் என்று சொல்லப்பட வேண்டுமெனவும் சட்டமா அதிபரின் பதில் திருப்தியானதல்லவென்றும் சுட்டிக்காட்டினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, காரணம் கூறியா கடந்த ஆட்சியில் நாங்கள் கைதுசெய்யப்பட்டோம் ? தடுத்து வைக்கப்பட்டோம்? அப்போது நாங்கள் கைது செய்யப்பட்டமைக்கு நீங்களும் ஒரு பிரதான காரணம்.
அலரி மாளிகையில் கூட்டங்களை நடத்தி அதில்தான் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்று சுமந்திரனை நோக்கி கடுந்தொனியில் கூறியுள்ளார் பெசில் .
இதனையடுத்து இருவருக்குமிடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. நீங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படவில்லை.
நான் எந்த கூட்டத்திலும் கலந்துகொண்டதில்லை . யாரை கைது செய்யவும் ஆலோசனை வழங்கியதில்லை.
யாரோ கொடுத்த கயிறை விழுங்கிக்கொண்டு நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று சுமந்திரன் எம்.பி. இங்கு பதிலளித்ததாக அறியமுடிந்தது.