Breaking
Fri. Apr 19th, 2024

ஊடகப்பிரிவு –

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடனோ வேறு எந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுடனோ தனக்கும் தனது குடும்பத்துக்கும் துளியளவும் தொடர்பு கிடையாதென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்

இன்று காலை (09) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்ட அவர், சுமார் 10 மணிநேர விசாரணையின் பின்னர், ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார்.

மேலும் தெரிவித்ததாவது,

“நேற்றுக் காலை (08) மன்னாரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நான் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, குற்றப்புலனாய்வு பிரிவிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றது. நாளை (இன்று) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு  வாக்குமூலம் அளிக்க வருமாறு கோரப்பட்டேன். எனது தேர்தல் நடவடிக்கைகள் அத்தனையையும் இடைநிறுத்தி விட்டு, இன்று காலை கொழும்பு வந்து, விசாரணைக்கு முகங்கொடுத்தேன்.

என்னிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட சம்பவங்கள் குறித்தே பல கேள்விகள் கேட்கப்பட்டன. குண்டுதாரி இன்ஷாபின் மாமனாரான அலாவுதீன், முன்னர் நான் பதவி வகித்த அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை மற்றும் எனது அமைச்சின் கீழான நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் நான் தெளிவான விளக்கங்களைக் கொடுத்தேன்” என்றார்.

“என்னைப் பொறுத்தவரையில் நான் நிரபராதி. சஹ்ரானை என் வாழ்நாளில் கண்டதே இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் எந்தவொரு செயற்பாட்டிலும் எனக்கு துளியளவும் தொடர்புமில்லை. நான் பயங்கரவாதத்தை முற்றாக வெறுப்பவன். என்னையும் எனது சகோதரர்களையும் அநியாயமாக, வேண்டுமென்றே இந்தச் சம்பவத்துடன் தொடர்புபடுத்துகின்றனர்” இவ்வாறு அவர் கூறினார்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர்,

“வாக்குமூலம் ஒன்றுக்காக எனது சகோதரரை அழைத்துச் சென்று, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளனர். குண்டுதாரி இன்ஷாபிடமிருந்து ஆறு தொலைபேசி அழைப்புக்கள் வந்ததாகத் தெரிவித்தே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனது சகோதரருக்கும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும், ஒருபோதுமே இருந்ததில்லை என்பதை நான் உறுதிபட அறிவேன். அவரை அநியாயமாகத் தடுத்து வைத்துள்ளனர். எனவே, நாங்கள் நியாயங் கோரி, நீதிமன்றத்தை நாடியுள்ளோம்”

“குண்டுதாரி சஹ்ரான் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல, உங்களது மற்றுமோர் சகோதரர் ரிப்கான் உதவியதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளதே” என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட்,

முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் பொய்யான சாட்சியங்களை வழங்கியுள்ளதாகவும், அது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, சட்டத்தரணி ஒருவரின் ஊடாக, சகோதரர் ரிப்கான் கடிதம் ஒன்றை எழுதி, தனது விளக்கத்தை வெளிப்படுத்த அவகாசம் வழங்குமாறும் கோரியிருப்பதாக முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *