Breaking
Sun. Nov 24th, 2024

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கம், சிங்கம், முதுகெலும்புள்ள தற்துணிவான செயல்வீரன் என்றெல்லாம் சிலர் துதிபாடிவந்தனர். ஆனால், தான் முதுகெலும்பற்ற அரசியல்வாதி என்பதை சாய்ந்தமருது நகரசபை விவகாரத்தில் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அலுவலகத்தில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் இன்று (2102.2020) முற்பகல் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” சாய்ந்தமருது நகர சபை உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி தேர்தலின்போது ராஜபக்ச தரப்பு உறுதியளித்திருந்தது. அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. சாய்ந்தமருது மக்களும் மகிழ்ச்சி வெளியிட்டனர்.

ஆனால் வலது கையில் கொடுத்துவிட்டு இடது கையால் பறித்தெடுப்பதுபோல் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் பல கதைகளை கூறினாலும் அவை அனைத்தும் அம்புலிமாமா கதைகள்போலவே உள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிறந்த அரச நிர்வாகி, சிந்தித்து மிகவும் நிதானமாகவே முடிவுகளை எடுப்பார், முன்வைத்த காலை பின்வைக்கமாட்டார், முதுகெலும்புள்ள அரசியல்வாதி என்றெல்லாம் கூறப்படும் நிலையில், சாய்ந்தமருது நகர சபை விவகாரத்தில் அவரது முதுகெலும்பு, கம்பீரம் எல்லாம் எங்கே போனது?

ஒரு சில பேரினவாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர்களை திருப்திபடுத்துவதற்காகவே வர்த்தமானி அறிவித்தல் இரத்துசெய்யப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. எனவே, நாட்டின் ஜனாதிபதியை ஒரு சில பேரினவாதிகளே இயக்குகின்றனர், அவர்களின் கட்டளைகளின் படியே அவர் செயற்படுகின்றார் என்ற சந்தேகம் எம்முள் ஏற்படுகின்றது.

அதுமட்டுமல்ல நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக, தைரியமாக முடிவெடுக்கும் நிலையில் தான் இல்லை என்பதையும் ஜனாதிபதி தற்போது ஏறத்தாழ உறுதிப்படுத்திவிட்டார்.

இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு உரிமை அரசியலை வழங்கமாட்டோம் என்பதை ராஜபக்சக்கள் பலதடவைகள் உறுதிப்படுத்திவிட்டனர். எனினும், அவர்களின் பின்னால் ஓடி சலுகைகளுக்காக தமிழ்பேசும் மக்களின் வாக்குகளை விலைபேசும் தரகர்கள் இருக்கவே செய்கின்றனர். எனவே, பொதுத்தேர்தலில் சிந்தித்து தமது வாக்குரிமையை பயன்படுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். இது தொடர்பில் நீங்களும் மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.

அதேவேளை, சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும். அவர்களுக்காக எமது குரல் ஓங்கி ஒலிக்கும்.” – என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *