Breaking
Sun. Nov 24th, 2024

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘எழுக தமிழ்’ பேரணியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரனை இனவாதியாக அடையாளப்படுத்திய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிங்களவர்களின் பொறுமையை சீண்டிப்பார்க்க வேண்டாம் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற எழுக தமிழ் பேரணியின் போது, வடக்கில் தொடரும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல், புதிதாக முளைத்துவரும் பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளுக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டது. இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் எழுக தமிழ் நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குரல் எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் கொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அதன் பொதுச் செயலாளர் கலகொஅத்தே ஞானசார தேரர், விக்னேஸ்வரனின் கருத்துகளுக்கு கடும் ஆத்திரத்துடன் எதிர்ப்பினையை வெளிப்படுத்தினார்.

‘தெற்கில் எந்தவொரு இடத்திலும் தமிழ் மக்களுக்கு வர்த்தகம் செய்ய முடியுமானால், பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை வரை தமிழர்களுக்கு எந்த இடங்களிலும் சுதந்திரமாக செயற்பட முடியுமாக இருந்தால், மலையகத்தில் தமிழர்கள் கலாசாரத்தை பாதுகாத்து, விண்ணைத் தொடும் அளவிற்கு கோவில்களைக் கட்டிக்கொண்டு, அவர்கள் சிங்கள மக்களுடன் ஐக்கியமாக வாழ முடியுமாக இருந்தால் ஏன் அப்படிப்பட்ட உரிமையை சிங்கள மக்களுக்கு வடக்கில் மறுக்கப்படுகின்றது என்பதை விக்னேஸ்வரனிடம் நாங்கள் கேட்க விரும்புகின்றோம்.

மறுபுறத்தில் பலவிதமான பிரிவினைவாதப் பேச்சுக்களை பேசுகின்ற வேளையில் ஆரம்ப காலத்தை நினைத்துப்பார்க்க வேண்டும்.

சிங்கள மக்களுக்கு சண்டித்தனம் காட்டினால் தமிழர்கள் அனைவரும் பெட்டிப் படுக்கையுடன் தமிழ்நாட்டிற்குச் செல்ல தயாராக வேண்டும் என்பதை இங்கு கூறிவைக்க வேண்டும்.

இந்த நிலமையையா உருவாக்க விரும்புகின்றீர்கள் என்று கேட்க விரும்புகின்றோம்.சிங்கள மக்களின் பொறுமையின் இறுதி விளிம்பை தட்டிப்பார்க்கும் பரிசோதனையை செய்ய வேண்டாம்.? ஆட்சியிலுள்ளவர்கள் இது தொடர்பில் மௌனம் காத்திருந்தாலும் இந்த நாட்டிற்கும், சிங்கள இனத்திற்கும் ஏற்படுத்தப்படுகின்ற அவமானத்தை பௌத்த சமூகத்தின் இளைய தலைமுறையினர் இதனை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறான செயல்களை கண்டு ஏன் இன்னும் மௌனமாக உள்ளீர்கள் என சிங்கள இளைஞர்கள் எங்களிடம் வினவுகின்றனர். ஆனாலும் நாங்கள் மௌனமாக இல்லை.

குளமாக இருந்தாலும், கிணறாக இருந்தாலும் அது கலங்கியிருக்கும் போது அதன் ஆழம் தெரியாது. அதேபோல் தான் நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்பதை கூறி வைக்க விரும்புகின்றோம்” – என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *