Breaking
Sat. Apr 20th, 2024

ஊடகப்பிரிவு–  

பழையவர்கள்தான் எம்.பியாக வேண்டுமென்ற அம்பாறையின் எழுதப்படாத மரபை உடைத்தெறிந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் இளையவரான புதியவர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் வெற்றிபெற்ற ஊடகவியலாளர் முஷாரப்பை வாழ்த்தி, நேற்றுமுன் தினம் (30) பொத்துவிலில் இடம்பெற்ற வெற்றிப் பெருவிழாவில் பிரதம விருந்தினராக அவர் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

தொடர்ந்து பேசிய அவர்,

“முடியாதென்று எதையுமே விட்டுவிலகி விடக்கூடாது. பிரச்சினை வரும்போது எதிர்த்து நின்று, தூய எண்ணங்களுடன் செயற்படும் போது, இறைவனின் உதவியும் அருளும் நமக்குக் கிடைக்கும். இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஒரு உதாரணப் புருஷராக விளங்குகின்றார். தோல்விகள்தான் வெற்றிக்கான பாதையென்பதை அவர் நிரூபித்துள்ளார்.

வரலாற்றில் பொத்துவில் மண், இம்முறைபோல் என்றுமே ஒற்றுமைப்பட்டது கிடையாது. முஷாரப்பின் வெற்றி வெறுமனே ஒரு தனிமனித வெற்றியல்ல. எமது கட்சியில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் பரந்தும் செறிந்தும் வாழும் நமது ஆதரவாளர்கள், தொண்டர்கள், கட்சி முக்கியஸ்தர்களின் உழைப்பினாலும், தியாகத்தினாலும் கிடைத்த சமூகத்துக்கான வெற்றி.

அம்பாறையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெற்றுக்கொள்ள முடியுமா? இல்லையா? என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்தபோது, இறைவனின் நாட்டத்தாலும் நம் அனைவரினதும் உழைப்பினாலும் இந்த வெற்றி நமக்குக் கிடைத்தது.

சுதந்திரத்துக்குப் பின்னர், பொத்துவில் மண், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றிருப்பது, நமக்குக் கிடைத்த மகிழ்ச்சி மட்டுமல்ல, இந்த ஊரையும் அம்பாறை மாவட்டத்தையும் அனைவரினதும் கவனத்துக்கும் உட்படுத்தியுள்ளது.

தேர்தலின் இறுதிக்கட்டத்தில் சகோதரர்களான நௌஷாட், சிராஸ் மீராஸாஹிப் ஆகியோர் ஏதேதோ காரணங்களைச் சொல்லி, கட்சியை தூக்கியெறிந்துவிட்டு வெளியேறினர். நாம் தேசியப்பட்டியல் வழங்கிய வீ.சி. இஸ்மாயிலும் எம்மைவிட்டு விலகினார். எனினும், எமது ஆதரவாளர்களும் வாக்காளர்களும் கட்சியில் உண்மையான விசுவாசம்கொண்ட முக்கியஸ்தர்களும் துவளவில்லை, சோர்வடையவும் இல்லை.

முஷாரப் பொத்துவிலின் சொத்தாக இருக்கின்ற போதும், அம்பாறை மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸின் முதுசமாக இருக்கின்றார். எனவே, பொத்துவில் மக்களாகிய நீங்கள், அம்பாறை மாவட்டத்தின் அனைத்து மக்களுக்கும் அவர் பணிபுரியக் கூடிய வகையில், உந்துசக்தியாக இருக்க வேண்டும். சமூகத்துக்காக உழைக்கக் கூடிய அவருக்கு, இந்த மாவட்டத்தின் எதிர்கால மேம்பாடுகளில் நிறையப் பொறுப்புக்கள் உண்டு.

பாராளுமன்றத்தில் அவரது கன்னி உரையைக் கேட்ட வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எம்.பி என்னிடம் வந்து, “நல்ல ஆற்றல் உள்ளவரை பாராளுமன்ற உறுப்பினராக கொண்டுவந்து இருக்கின்றீர்கள்” என்றார். இது நமக்குப் பெருமை தருகின்றது.

இம்முறை தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் எல்லாக் கட்சிகளின் உழைப்பினாலும் கிடைத்த அலி சப்ரி ரஹீம் எம்.பி குறித்தும், நாம் பெருமைகொள்கின்றோம். மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரான அவர், 33 வருடங்களின் பின்னர் எம்.பி ஆகியுள்ளார். 

அதேபோன்று, 2015 ஆம் ஆண்டு தேர்தலில், அனுராதபுரம் மாவட்டத்தில் இஷாக் ரஹ்மான் எம்.பியை வெற்றிபெறச் செய்து சாதனை படைத்ததுடன், இம்முறையும் அவர் இரண்டாம் முறையாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்” என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவித்தார்.          

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *