மன்னார் மற்றும் முசலி பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான வீடுகளில் மக்கள் யாருமே குடியிருக்காத துர்ப்பாக்கியமான சூழ்நிலை காணப்படுவது வேதனையளிக்கின்றது என மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.
மன்னார் முள்ளிக்குளத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…….
முள்ளிக்குளம் பிரதேசம் நீண்டகால இடப்பெயர்வினாலே பல்வேறுபட்ட துன்பங்களையும் துயரங்களையும் இந்த மக்கள் சந்தித்துள்ளனர்.
விரைவான அபிவிருத்தியை நோக்கி இப்பிரதேசம் கொண்டு செல்ல வேண்டும் என பல்வேறு முயற்சிகளை நாம் முன்னெடுத்துள்ளோம்.
எங்களுக்கு தடையாக இருந்தது இப்பகுதி விடுவிக்கப்பட்ட பின்னரும் மக்கள் இந்த இடத்திற்கு வந்து குடியேறுவதில் பல குறைபாடுகளும், முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் எம்மால் முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை.
இங்கு வழங்கப்படுகின்ற 50 வீட்டுத்திட்டத்திலும் மக்கள் குடியேறுவார்கள் என்றால் நிச்சயமாக 2020 ஆம் ஆண்டினுடைய வேலைத்திட்டங்களிலேயே பல்வேறு பட்ட அபிவிருத்திகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
எத்தனையோ இடங்களிலே வீடுகளை அமைத்து வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்த போதும் மக்கள் மீள்குடியேறாத நிலையில் குறித்த நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளது.
முசலி பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வீடுகளில் 594 வீடுகளில் யாருமே குடியிருக்காத துர்ப்பாக்கியமான சூழ்நிலை காணப்படுவது வேதனையளிக்கின்றது.
அதே போல் மன்னார் நகர பகுதியில் 500 இற்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் குடியிருக்காத நிலை காணப்படுகின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.