முள்ளிக்குளம் மக்களின் காணிகளை அடையாளப்படுத்தும் ஆவணங்கள் நேற்று காலை முள்ளிக்குளம் ஆலய வளாகத்தில் பரிசீலினை செய்யப்பட்டதோடு, பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முள்ளிக்குளம் மக்களின் பூர்வீக நிலங்களில் முதற்கட்டமாக 100 ஏக்கர் காணிகளை கடற்படையினர் கடந்த மாதம் 29 ஆம் திகதி விடுவித்தனர்.
முள்ளிக்குளம் மக்கள் தமது நிலத்தை விடுவிக்கக் கோரி கடந்த 38 தினங்களாக மேற்கொண்டு வந்த போராட்டத்தின் பலனாக கடந்த 29 ஆம் திகதி காணிகள் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்டது.
குறித்த கிராம மக்கள் மறுநாள் 30 ஆம் திகதி தமது சொந்த மண்ணில் கால் பதித்தனர்.
பின்னர் காணி அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மக்கள் முள்ளிக்குளம் ஆலயம் சார்ந்த பகுதிகளில் தஞ்சமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை முள்ளிக்குளம் கிராமத்திற்குச் சென்ற முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், முள்ளிக்குளம் மக்களின் காணிகள் தொடர்பான ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்ட வேண்டும் எனவும் இன்று செவ்வாய்க்கிழமை காலை முள்ளிக்குளம் மக்கள் தமது காணி தொடர்பாக உள்ள அனைத்து ஆவணங்களையும் கொண்டு வந்து சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
அதற்கமைவாக நேற்று காலை முள்ளிக்குளம் ஆலயத்தில் முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தலைமையில், முசலி பிரதேச செயலக காணி கிளை அதிகாரிகள் இணைந்து முள்ளிக்குளம் மக்களின் காணிகளை அடையாளப்படுத்தப்படும் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டதோடு பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டது.
கடற்படையினரினால் முதற்கட்டமாக 100 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ள போதும் அதில் 77 ஏக்கர் காணிகலே முசலி பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முசலி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
மேலும் 23 ஏக்கர் காணியை விடுவிக்க 8 மாத கால அவகாசம் கோரியுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
குறித்த 23 ஏக்கர் காணியிலே கடற்படையினரின் குடும்பங்கள் 27 வீடுகளில் வசித்து வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
எனினும் குறித்த 77 ஏக்கர் காணியும் ஒரு வார காலத்தினுள் நில அளவை செய்யப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்படும் என பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
எனினும் தமது சொந்த மண்ணில் காலடி எடுத்து வைத்து சுமார் 10 நாட்களாகின்ற போதும் சுதந்திரமற்ற முறையில் தாம் வாழ்ந்து வருவதாகவும், உடனடியாக தமது காணிகள் அடையாளம் காணப்பட்டு காணிகளை துப்பரவு செய்ய அனுமதியை வழங்குமாறு முள்ளிக்குளம் மக்கள் பிரதேசச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் போது முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா, மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் செயலாளர் ஜே.ஜே.கெனடி, இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.