(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
முசலிப்பிரதேச செயலாளர் பிரிவில் ஏறத்தாழ 30 பாரம்பரிய கிராமங்கள் உள்ளன.இங்குள்ள மக்களின் எரிபொருள் தேவைகளைப்பூர்த்தி செய்ய எவ்வித எரிபொருள் நிரப்பு நிலையமும் இல்லை.எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத பிரதேச சபை,பிரதேச செயலகம் என்ற சிறப்புப் பெயர் முசலியையே சாரும்.25-30 கி.மீ.பயணம் செய்து எரிபொருளை நிரப்பவேண்டியுள்ளது.
இதற்கொரு மாற்றுத்தீர்வாக இங்குள்ள சில்லறைக்கடைகளில் பெற்றோல் விற்கப்படுவதைக் காணமுடிகின்றது.
இது பலருக்குப்பெரும் உதவியாக இருக்கலாம்.ஆனால் பெற்றோல் இவ்வாறு விற்பது குற்றமாகும்.இதைப் பொலிசார் தடுப்பது சிலருக்கு அதிக கவலையாக இருக்கலாம்.பெற்றோல் விற்பனை செய்த பல கடைகள் தீப்பற்றி முற்றாக அழிந்ததைப் பார்த்திருக்கிறோம்.
எமது கடைகளை காப்புறுதி செய்துள்ளோமா?அவ்வாறு செய்திருந்தாலும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டது ஊர்ஜிதமானால் நட்டஈடு கிடைக்காது.இவ்விடயம் சாதாரண மக்களுக்குத் தெரியாது.அனர்த்த முன்னெச்சரிக்கையாக நாம் செயற்பட வேண்டும்.
முசலிப்பிரதேசத்தில் தனியார் ,அரச நிறுவனம் போன்றவை எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஏன் அமைக்கக்கூடாது ? முசலிக் கூட்டுறவுச்சங்கத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கத் தேவையான நிதியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வழங்கியுள்ளதாக அறிகின்றோம். ஆனால் அதை எங்கே அமைப்பது? என்ற இழுபறி நிலமையினால் இன்னும் வேலை ஆரம்பிக்கபடவில்லை.
வேப்பங்குளம்,சிலாவத்துறை ,மறிச்சுக்கட்டி போன்ற பிரதேசங்களில் ஒவ்வொரு அரச அல்லது தனியார் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்படுவது சாலப் பொருத்தம்.
எரிபொருள் நிரப்பு நிலையமும் திறக்கமாட்டோம்.சில்லறைக் கடைகளில் எரிபொருள் விற்பதைச் சட்டம் தடுக்கிறது என்றால் இம்மக்கள் என்ன செய்வது.இவர்களுக்கு நல்லாட்சியிலாவது விமோசனம் கிடைக்குமா?
உரிய அமைச்சர்கள் அரச அதிகாரிகள் கவனம் செலுத்தி பெற்றோல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு முசலி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.