Breaking
Sun. Nov 24th, 2024

முகக்கவசத் தடை சட்டம் நடைமுறைக்கு வரும் நிலையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் புர்கா, நிகாப் போன்றவை தடைசெய்யப்படும் எனவும் அமைச்சரவை பத்திரத்தில் ஏற்கனவே கையொப்பம் இட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக அமைச்சரவையில் அங்கீகாரமும் பெறப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு முகத்தை மறைத்து ஆடை அணியும் முறையை தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தத் தடை அமுலுக்கு வரும்போது முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, நிகாப் போன்றவை சாதாரணமாகவே தடைசெய்யப்பட்டு விடும்.

இது இனவாதமோ அல்லது அடக்குமுறையோ அல்ல. பல்வேறு நாடுகள் தமது பாதுகாப்பை கருத்தில் கொண்டு முகக்கவசத்தை தடை செய்துள்ளனர்.

தற்போது அமைச்சரவை பத்திரத்தில் நான் கையொப்பமிட்டுள்ளேன். இதில் முகக்கவசம் தடை செய்யப்பட வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது.

அதற்காக தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முகக்கவசம் தடையா என எவரும் கேட்க முடியும். ஆனால், இவ்வாறான முகக்கவசம் அணிந்து சென்றாலும் தேவைப்படும் வேளையில் முகக்கவசத்தை அகற்றி முகத்தை காட்டுமாறு பணிக்க முடியும்.

 ஆனால் முஸ்லிம் பெண்களிடம் அவ்வாறு கூறினால் அது வேறு பிரச்சினையை உருவாக்கும். எனவேதான் சட்ட ரீதியாக இவ்வாறான தடையை கொண்டுவருகின்றோம்.

இந்த தீர்மானம் நான் எடுத்த தனித் தீர்மானம் அல்ல, 2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதில் ஹக்கீம், சரத் பொன்சேகா போன்றவர்கள் இருந்தே இந்த தீர்மானம் எடுத்தனர். அதேபோல் ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் இதையே வலியுறுத்தியுள்ளனர்.

எனவே, நான் எடுத்த தீர்மானமாக எவரும் கருத வேண்டாம். இப்போது விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற காரணத்தினால் என்னூடாக இந்த அமைச்சரவை பத்திரம் நகர்த்தப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் விரைவில் முகக்கவசம் தடை அமுலுக்கு வரும் என்றார்.

Editor

By Editor

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *