Breaking
Sun. Nov 24th, 2024

மீள்குடியேற்றச் செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலான வடமாகாண சபையின் நடவடிக்கைகளை நாம் பொறுத்துக் கொண்டு வாளாவிருக்கப் போவதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் முறையாக ஒரு கட்டமைப்பின் கீழே குடியேற்றி அவர்களை நிம்மதியாக வாழ வைக்கவென உருவாக்கப்பட்ட வடக்கு மீள்குடியேற்ற செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. செயலணியின் நோக்கங்களை திரிபுபடுத்தி அதன் எதிர்கால நடவடிக்கைகளை கறுப்புக் கண்ணோடு பார்த்துவரும் வடமாகாண சபையின் போக்கை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நேத்திரா தொலைக்காட்சியில் நேற்று மாலை (22.07.2016) இடம் பெற்ற வெளிச்சம் அரசியல் கலந்துரையாடலில் அமைச்சர் பங்கேற்று தனது கருத்துக்களை முன்வைத்தார். பிரபல ஊடகவியலாளர் யூ.எல். யாக்கூப் நெறிப்படுத்திய இந்த நிகழ்ச்சியில் டெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.  சூடான வாதப் பிரதிவாதங்களுடன் இடம் பெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் றிஷாட் தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தார்.

முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஐயா தலைமையிலான வடக்கு மாகாண சபை கடந்த 3 வருட காலம் பதவியில் இருந்து வருகின்றது. 1990 ஆம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இன்னும் தென்னிலங்கையில் பல இடங்களில் முகாம்களிலும் வீடுகளிலும் வாழ்க்கை நடாத்துகின்றனர். வடக்கு முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றிய போது தமிழ் மக்கள் அந்த செயற்பாட்டை ஆதரிக்கவில்லை. புலிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த தமிழக்; கூட்டமைப்பு தலைவர்கள் பயத்தின் காரணமாக வாய்திறக்க மறுத்தனர். இந்த அக்கிரமச் செயற்பாட்டுக்கு எதிராக குரல் கொடுக்காது மௌனம் காத்தனர். தற்போது சமாதான சூழல் ஏற்பட்டு வடமாகாணத்தில் முஸ்லிம்கள் மீளக்குடியேறக் கூடிய சுயாதீன நிலை உருவாகியுள்ள போதும் மீள்குடியேற்றத்துக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் இடப்படுகின்றன. முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் முஸ்லிம்கள் தமது பூர்வீகக் காணியில் குடியேற எத்தனித்த போது மாகாண சபை உறுப்பினர்களில் ஒரு சிலர் முன்னின்று எதிர்த்த சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.

வடமாகாண சபையைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் குடியேறுவதற்கு இற்றைவரை துளியளவேனும் உதவவில்லை. உதவாவிட்டாலும் பரவாயில்லை உதட்டளவிலேனும் ஆதரவளிக்கவுமில்லை. இந்த நிலையில் மத்திய அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ள மீள்குடியேற்றக் கட்டமைப்பை சீர் குலைப்பதற்கு மாகாண சபை முன்னிற்பது வேதனையானது. அது மனித தர்மமும் அல்ல. அகதிகளாக வாழும் இந்த மக்கள் படுகின்ற அவஸ்தைகளை கண்டும் காணாதது போன்று செயற்படும் இந்த மாகாண சபையின் நடவடிக்கை குறித்து முஸ்லிம் மக்களுக்கு நிறைய கேள்விகள் எழுகின்றன. இந்த இலட்சணத்தில் காணியதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்றெல்லாம் கோரிக்கை விடப்படுகின்றன. முஸ்லிம்களாகிய நாங்கள் தமிழ் மக்களுடன் ஒன்றாக வாழ்ந்தவர்கள். அவர்கள் பட்ட கஷ்டங்களை கண்டு நாம் எந்தக் காலத்திலும் சந்தோஷப்பட்டவர்களும் அல்லர். யுத்த காலத்தில் நாமும் பல்வேறு கஷ்டங்களை அவர்களுடன் சேர்ந்து அனுபவித்திருக்கின்றோம். அதைவிட ஒருபடி மேலாக தமிழ் ஆயுதக் குழுக்களின் அட்டகாசங்களால் முஸ்லிம் இளைஞர்களை கருவறுக்கப்பட்டிருக்கின்றனர்.

எனினும் நாம் போராட்டத்தை ஒரு போதும் காட்டிக் கொடுத்தவர்கள் அல்ல. பொறுமையுடன் வாழ்ந்தவர்கள். தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கோ அல்லது அதிகார முறைமைக்கோ எந்தக்காலத்திலும் நாம் இடைஞ்சலாக இருந்ததில்லை. இயங்கியதுமில்லை. இயங்கவும் மாட்டோம். அவர்களின்; நலன்களுக்கும் தடையாக இருந்ததில்லை. எனினும் அதிகாரப் பகிர்வு என்று வரும் போது அது வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது அபிலாசைகளுக்கு மாற்றமாக சர்வதேசத்தின் உதவியுடன் திணிக்கப்படும் எந்த ஒரு தீர்வுத்திட்டத்தையும் நாம் ஆதரிக்கப் போவதில்லை. அவ்வாறான பலாத்கார நடவடிக்கை நிரந்தர சமாதானத்தை ஒருபோதும் தரப்போவதுமில்லை என்பதை நான் இந்த இடத்தில் பகிரங்கமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் உடுத்த உடையுடன் ஓடோடி வந்த போது மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த நான் அங    ;கு சென்று அவர்களை அரவணைத்து மெனிக் பாமில் சில அடிப்படை வசதிகளுடன் குடியேற்றிவன். நான் ஒரு இனவாதியல்ல. எனது அரசியல் வாழ்வில் தமிழ்-முஸ்லிம் என்ற பேதமின்றி பணியாற்றி வந்திருக்கின்றேன். இன்னும் அதனைத் தொடர்கின்றேன். ஆனால் அரசியல் இருப்புக்காக என்னை ஓர் இனவாதியாக சித்தரித்து தாங்கள் ஆதாயம் அடைவதற்காக  சில அரசியல் வாதிகள் முயற்சித்து வருகின்றனர். றிஷாட் என்றால் இவர்களுக்கு கசக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் உருவாகியபோது நாட்டுத் தலைமைகளிடம் சென்று றிஷாட்டுக்கு, மீள் குடியேற்ற அமைச்சை வழங்க வேண்டாம் என நிபந்தனை விதித்த தமிழ் அரசியல்வாதிகளின் சிறுபிள்ளைத் தனமான செயலை அறிந்து நான் வேதனை அடைந்திருக்கிறேன்.

குற்றமிழைக்காது தண்டிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களை மீள் குடியேற்றுவதற்கு எனக்கு பல்வேறு தடைகளைப் போடுகின்றார்கள். என்னை விமர்சிக்கிறார்கள் சேறு பூசுகின்றார்கள். வடக்கின் மக்கள் பிரதிநிதியான என்னையும் வடக்கு முஸ்லிம்களை மையமாகக் கொண்டு இயங்கும் சமூக நல இயக்கங்களையும் அழைத்து வடமாகாண சபை முதலமைச்சர் மீள் குடியேற்றம் தொடர்பில் ஒரு வார்த்தையேனும் இதுவரை பேசியதில்லை. எமது சமூகம் சார்ந்த அமைப்புக்கள் இந்த பிரச்சினைகள் தொடர்பில் அவரை சந்திக்க வேண்டும் என்று பல சந்தர்ப்பங்களில் விடுத்த கோரிக்கைகளையும் முதலமைச்சர் கருத்திற்கு எடுப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் நாம் சொந்தக் காலில் நின்று முயற்சிகள் மேற்கொண்டாலும் அந்தக் காலையும் வட மாகாண சபை தட்டிவிடப்பார்க்கின்றது.

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பில் வடமாகாண சபையில் இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றிய விக்னேஸ்;வரன் ஐயா புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட வடபுல முஸ்லிம்கள்  குறித்து இன்னும் மௌனம் காப்பதன் மர்மம்தான் விளங்கவில்லை?

வவுனியாவில் பொருளாதார மையம் ஒன்றை பல கோடி ரூபா செலவில் அமைப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு வடமாகாண சபை முட்டுக்கட்டை போடுகின்றது. வவுனியாவுக்கு வந்த பொருளாதார மையத்தை ஓமந்தைக்கு கொண்டு செல்வதற்காக இவர்கள் பாடாய்ப்பட்டுத்திரிகின்றனர். நிபுணர்களைக் கொண்டு வவுனியா தாண்டிக்குளம் இந்த மையத்துக்கு பொருத்தமில்லை என அறிக்கை சமர்ப்பிக்கின்றன. தங்கள் கட்சிக்குள்ளேயே வாக்களிப்பை நடாத்தி மக்களை திசை திருப்பிகின்றனர்.

பொருளாதார மையம் தாண்டிக்குளத்தில் தான் அமைய வேண்டும் என்பதில் வன்னி மாவட்ட எம்.பிக்களும் வடமாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் வன்னியைச் சேர்ந்த அமைச்சர்களும் உறுப்பினர்களும் இந்த பொருளாதார மையத்தின் ஆணி வேர்களான விவசாயிகளும் வர்த்தகர்களும் உறுதியாக இருக்கும் போது இதற்கு மாற்றமான தீர்மானத்தை எடுத்து ஓமந்தைக்கு கொண்டு செல்வதில் இந்தச் சபை முனைப்புக் காட்டுகின்றது. தாண்டிக் குளத்தில் இது அமைய வேண்டும் என வலியுறுத்தி வரும் தமிழ்க் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களான பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, டாக்டர் சிவமோகன் எம்.பி மற்றும் மாகாண சபை அமைச்சர்களான சட்டத்தரணி டெனீஸ்வரன், ஆர். சத்தியலிங்கம், மாகாண சபை உறுப்பினரான புளொட் முக்கியஸ்தர் லிங்கநாதன் ஆகியோரை எதுவுமே விமர்சிக்காது அவர்களை தவிர்த்துவிட்டு எனக்கு மட்மே கல்லெறிந்து வருகிறார் விக்கி ஐயா. யாழ்ப்பாணத்தில் பகிரங்கக் கூட்டம் ஒன்றில் றிஷாட் தான் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என கூறி அந்த மக்களிடம் என்னை ஓர் இனவாதியாக அவர் சித்தரித்துள்ளார். இது எந்த வகையில் நியாயம்?

தமிழ் முஸ்லிம் உறவுக்கு இவ்வாறான செயற்பாடுகள் ஆரோக்கிமானதல்ல என்பதை நான் இங்கு கூற விரும்புகின்றேன். நாங்களும் தமிழ் சகோரர்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றோம். நீங்கள் அடிக்கடி கூறி வரும் பிட்டும் தேங்காய்ப்பூவும் என்ற உவமானத் தொடரை நிரூபிக்க வடபுல அகதிகளான எங்களை உள்ளன்புடன் ஆதரியுங்கள், அரவணையுங்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.0675f246-03bd-441e-807b-8407cb83b019

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *