மீள்குடியேற்ற செயலணி கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்த ரணில், வடமாகாண மீள்குடியேற்ற செயலணியில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் இணைத்துக் கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
சபையில் இன்று உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண மீள்குடியேற்ற செயலணி குறித்து கருத்துக்களை வெளியிட்டார்.
இதன்போது ஒன்றன்பின் ஒன்றாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சருமான டி.எம்.சுவாமிநாதனும் ஆங்கிலத்தில் உரையாற்றினார்கள்.
அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்களே இந்தச் செயலணியில் அங்கம் வகிக்க முடியும். தற்போது மூன்று அமைச்சர்கள் இதில் உள்ளனர். இவ்வாறான நிலையில் வடமாகாண முதலமைச்சரை எவ்வாறு இதில் சேர்ப்பது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மஹிந்த ராஜபக்ச செய்ததையே நீங்களும் செய்யுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டு ஆசனத்தில் அமர்ந்தார்.
இதேவேளை வடமாகாண மீள்குடியேற்ற செயலணி சர்ச்சை குறித்து இவ்வாறு வாதவிவாதம் இடம்பெற்ற வேளையில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் சபையில் இருந்தபோதிலும் எதுவித குறுக்கீடுகளும் செய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.