வவுனியாவில் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்சி சார்ந்த ரீதியில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக நேற்றுமுன் தினம் மாலை 4 மணியளவில் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் ஒன்றிணைந்த அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பாரதிபுரம் பகுதியில் பொருத்து வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 20 பேருக்கு பொருத்து வீடு வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பொருத்துவீடு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பெயர் விபரங்கள் நேற்றுமுன் தினம் வெளியாகியுள்ளன.
இதையடுத்து அப்பகுதி மக்களிடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. பாரதிபுரம் பகுதியில் 217 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 115 வீடுகள் தமது கிராமத்திற்கு தேவைப்படுவதாகவும் விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது மீள்குடியேற்ற அமைச்சரினால் வழங்கப்படும் பொருத்து வீட்டிற்கு விண்ணப்பித்தவர்களில் 20 பேருக்கு பொருத்துவீடு வழங்குவதற்கு சிபாரிசு செய்து பெயர் விபரங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொருத்து வீடுகள் வழங்கப்படும்போது பிரதேச செயலாளருக்கோ அப்பகுதி கிராம சேவையாளருக்கோ தெரியப்படுத்தப்படவில்லை அவர்களிடம் சிபாரிசும் பெறப்படவில்லை என்று அப்பகுதி கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பொருத்துவீடு வழங்கப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் கட்சி சார்ந்தவர்களைத் தெரிவு செய்து பொருத்துவீட்டிற்கு விண்ணப்பித்தவர்களில் முன்னுரிமை அடிப்படையில் குறித்த 20 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் எமது கிராமத்திற்குள் சண்டைகள் சச்சரவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் 115 பேருக்கு வீடுகள் தேவைப்படும்போது 20 பேருக்கு மட்டும் வழங்கப்படும்போது பல பிரச்சினைகள் ஏற்படவுள்ளதாகவும் தமது கிராமத்திற்கு முன்னரும் இதுபோன்ற செயற்பாடுகள் இடம்பெற்று வீட்டுத்திட்டம் இல்லாமல் சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.