ரஸீன் ரஸ்மின்
தமது கட்சியோடு இணைந்து செயற்படுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்த அழைப்புக்கிணங்க, அக்கட்சியில் இணைய ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று, அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கே.ஏ.பாயிஸ், நேற்றுத் திங்கட்கிழமை (24) தெரிவித்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமை, கண்டியிலுள்ள கட்சியின் காரியாலயத்தில், ஞாயிற்றுக்கிழமை (23) சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், எதுவிதமான நிபந்தனைகளுமின்றி, தனது ஆதரவாளர்கள் சகிதம் முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸ், இந்த வாரமளவில் மு.காவில் இணைந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதுதொடர்பில், முன்னாள் பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸிடம், நேற்றுத் தொடர்புகொண்டு கேட்ட போது கூறியதாவது,
‘தேசிய ரீதியில், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கூட்டாகச் செயற்பட வேண்டும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைசச்ருமான ரவூப் ஹக்கீம் ஆகியோரைச் சந்தித்து வலியுறுத்தியிருந்தேன்.
ஹக்கீமைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தினோம். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு, புத்தளத்தில் இடம்பெற்ற மர்ஹூம் எம்.எச்.எம்.ஞாபகார்த்த கூட்டத்தின் போது, இதுபற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது.
மு.கா கட்சியோடு, மீண்டும் இணைந்துகொள்வது குறித்து ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர், எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி, மு.காவில் இணைந்துகொள்வதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது” என்றார்.