கட்டுரைகள்பிரதான செய்திகள்

மியன்மார் நடக்கும் இனப்படுகொலை நெஞ்சைப் பிழியும் காட்சிகள் – மௌனம் கலைக்காத முஸ்லிம் நாடுகள்

நாகரீகத்தின் உச்சத்தில் மனிதர்கள் வாழ்வதாக கருதப்படும் இக்கால கட்டத்தில் இப்படியொரு பயங்கரமும் நடைபெறுகின்றதா? என்று சிந்திக்கும் அளவு மியன்மார் – பர்மா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் உச்சத்தை அடைந்திருக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், கலவரங்கள் காரணமான ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு கடல் வழியாக தப்பி ஓடுகின்றார்கள்.

இரும்புத் திரை நாடு – மியன்மார் ( மறுபிரசுரம் 2015 )

பௌத்த மதத்தை ஆட்சி மதமாகக் கொண்டுள்ள மியன்மார் உலக நாடுகளினால் “இரும்புத் திரை நாடு” என்று அழைக்கப்படுகின்றது.

பர்மா என்ற பெயரில் அழைக்கப்பட்ட நாடு 1989ம் ஆண்டு மியான்மார் (அல்லது Union of Myanmar) என்று மாற்றியமைக்கப்பட்டது.

சுமார் 130 இனங்கள் வாழுகின்ற மியன்மாரில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் காணப்படுகின்றன.

பல்லாயிரக்கணக்கான பௌத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது ‘Land of Pagodas’ என்றும் அழைக்கப்படுகின்றது.

சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி மியன்மார் இராணுவத்திற்கு எதிராக போராடி, ஜனநாயத்தை வெளிப்படுத்த பாடுபட்டார்.

இதனை எதிர்த்து இராணுவம் மேற்கொண்ட செயல்பாடுகளை விபரிக்கும் விதமாகவே “இரும்புத் திரை நாடு” என்று மியன்மார் அழைக்கப்படுகின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான மியன்மார் அரசு

15ம் நூற்றாண்டுகளில் இருந்தே மியன்மாரில் வாழ்ந்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த தர்மத்தை ஆட்சி மதமாக வைத்துள்ள மியன்மார் மேற்கொள்ளும் தாக்குதல்கள் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதவைகளாகும்.

மதக் கலவரங்கள், தனி மனித தாக்குதல்கள், வர்த்தக நிலையங்களுக்கு எதிரான தாக்குதல்கள், திட்டமிட்ட படுகொலைகள் என்று முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மாரில் நடைபெரும் தாக்குதல்கள் முடிவில்லாதவையாகும்.

உண்ண உணவின்றி, குடிப்பதற்கு நீராகாரமின்றி, தங்க இடமின்றி கடந்த பல வருடங்களாகவே மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் பலவிதமான அவதிக்கும் உள்ளாகி வருகின்றார்கள்.

2012 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசுத் தலைவர் தெய்ன் செய்ன் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்ட “முஸ்லிம்களை மூன்றாம் நாடொன்றுக்கு அனுப்பும் திட்டம்” காரணமாக அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இன்னும் வீரியமடையத் தொடங்கின.

அரசுத் தலைவர் அறிவித்த சர்ச்சைக்குரிய திட்டத்தினை ஆதரித்து மியன்மாரின் சர்ச்சைக்குரிய 969 இயக்கத்தின் தலைவரும், பௌத்த மத குருவுமான அசின் விராது தலைமையில் நடத்தப்பட்ட பேரணியைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 43 பேர் கொலை செய்யப்பட்டார்கள்.

அசின் விராதுவின் 969

969 இயக்கம் (969 Movement) என்பது பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மியன்மாரில் இஸ்லாமிய பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு தேசியவாத அமைப்பாகும்.

மியன்மாரின் சர்ச்சைக்குரிய பௌத்த மதகுரு அசின் விராது தேரர் இதன் தலைவராக இருந்து செயற்படுகிறார்.

இவ்வியக்கம் சர்வதேச மட்டத்தில் பலத்த விமர்சனத்திற்கு உள்ளானது. பன்னாட்டு ஊடகங்கள் இதன் தலைவர் அசின் விராது தொடர்பில் பலத்த விமர்சனைத்தை முன்வைத்தன.

அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை “பௌத்த பயங்கரவாதத்தின் முகம்” என்று இவரை விமர்சனம் செய்திருந்தது.

மியன்மாரில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளின் சூத்திரதாரியாக இருப்பது இவரும், இவருடைய 969 இயக்கமும் தான். மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை இவரே வழிநடத்தி வருகிறார்.

இவருடைய தூண்டுதலில் ஈவிரக்கமின்றி பெண்களும் குழந்தைகளும் கூட கொன்று குவிக்கப்படுகின்றனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக 969 அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் வன்முறைகளால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பை வழிநடத்தும் அஸின் விராது தேரரை “பர்மாவின் பின்லேடன்” என சர்வதேச ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

இன்றைய நிலையில், உலகில் பௌத்த தீவிரவாதத்தின் ஆணிவேராக கணிக்கப்படுபவரே அஸின் விராது தேரர். அகிம்சையையும், தர்மத்தையும் போதிப்பதாக கூறப்படும் பௌத்த மதத்தில் இத்தகையதொரு கடும் போக்குவாத அமைப்பு உருவாக்கப்பட்டு வழி நடத்தப்படுவது ஏவ்விதத்தில் சரியானதாக இருக்க முடியும்?

யார் இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள்.

மியன்மார் அரசு மற்றும் அசின் விராது தலைமையிலான 969 இயக்கத்தினால் தினமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் ரோஹிங்யா முஸ்லிம்களின் வரலாறு தெளிவானது.

15 ம் நூற்றாண்டு முதல் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மார் – பர்மாவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன.

பௌத்த பேரினவாத கடும் போக்காளர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்நாட்டில் வாழ முடியாத நிலையினை எட்டியுள்ள இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் நாட்டை விடடும் வெளியேற முடிவெடுத்து கடல் வழி பயணத்தில் வேறு நாடுகளை அடைய முற்பட்ட வேலை ஆயிரக் கணக்கானவர்கள் கடலில் வீழ்ந்து மரணித்து விட்டார்கள்.

மௌனம் கலைக்காத முஸ்லிம் நாடுகள்

உயிர் பிழைப்பதற்காக உயிர்ப் பிச்சைக் கேட்கும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அண்டை நாடுகளான பங்களா தேசம், இந்தோனேஷியா, மலேசியா போன்ற முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் கூட அடைக்கலம் கொடுக்கத் தயங்குகின்றன.

சிலருக்காக கதவைத் திறந்தால் பலருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி வருமோ என்ற பயத்தின் காரணமாக இந்நாடுகள் மௌனம் காத்து வருகின்றன.

தாய்லாந்தைப் பொறுத்த வரையில் அதுவும் பௌத்தத்தை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்பதனால் மியன்மாரை பகைத்துக் கொள்ள தாய்லாந்து விரும்பவில்லை என்பதே நிதர்சனமாகும்.

மலேசியா முஸ்லிம் நாடு. அதுவும் செல்வந்த நாடாக இருப்பது தான் அவர்களுக்குரிய பெரும் பிரச்சினையாகும்.

ரோஹிங்யா அகதிகளை தமது நாட்டுக்குள் அனுமதித்தால் உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்புக்கு சிக்கலாகி விடும் என்ற காரணத்தினால் மலேசியாவுக்குள் ரோஹிங்யா அகதிகள் உள்வாங்கப்படாமல் விடப்பட்டிருக்கின்றார்கள்.

அத்துடன் அனைத்து மக்களையும் ஏற்றத் தாழ்வின்றி பார்க்கும் இஸ்லாத்தை மதமாக கொண்ட மலேசியா முஸ்லிம்கள். ரோஹிங்யா முஸ்லிம்களை தாழ்த்தப்பட்டவர்களாக நினைப்பதும் இன்னொரு காரணமாக சொல்லப்படுகின்றது.

ஸக்காத், ஸதகா போன்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டிய உதவித் தொகை தொடர்பாக வலியுறுத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் மலேசிய மக்களின் இது போன்ற செயல்பாடுகள் இஸ்லாத்தின் பார்வையில் மிகவும் கண்டிக்கத் தக்கவையாகும்.

பங்களாதேச அரசும் ரோஹிங்யா முஸ்லிம்களை தமது நாட்டில் இணைத்துக் கொள்வதற்கு விரும்பவில்லை. நாட்டின் சனத்தொகை பெருக்கமாக இருக்கின்ற காரணத்தினால் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு பங்களாதேசத்தில் இடமளித்தால் பாரிய பிரச்சினைகள் தோன்றலாம் என்று கருதி அவர்களை ஏற்றுக் கொள்வதை பங்களாதேச அரசும் தவிர்த்து வருகின்றது.

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான “ஆசியான்” ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல வேண்டும் என்று மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வந்தாலும் “ஆசியான்” இது தொடர்பில் மௌனமாகவே இருந்து வருகின்றது.

ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளைக் காப்பாற்றுவதை விட மியன்மாருடனான உறவைப் பேணுவதே “ஆசியான்” அமைப்பின் முக்கிய பணியாக அது நினைக்கின்றது.

சர்வதேச சமுத்திரவியல் சட்டம்

சர்வதேச சமுத்திரவியல் சட்டத்தின் பிரகாரம் கடலில் நிர்க்கதியான நிலையில் இருப்போரை மீண்டும் கடலுக்குள் துரத்தியடிப்பது என்பது சட்டவிரோதமான செயலாகும்.

சர்வதேச சமுத்திரவியல் சட்டத்தின்படி ரோஹிங்யா அகதிகளை காப்பாற்றுவது ஒருபுறமிருக்க, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கே பல காலங்கள் ஆகலாம் என்பதே உண்மையாகும்.

எது எப்படிப் போனாலும் சமுத்திரவியல் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும் “ஆசியான்” அமைப்பின் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.

சர்வதேச சமுத்திரவியல் சட்டம், அதை நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என அனைத்தையும் ஆராய்ந்து “ஆசியான்” போன்ற அமைப்புகள் முடிவெடுப்பதற்குள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு மரணத்தின் விளிம்பில் இருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களின் நிலை என்னாகும்?

இலங்கை இறுதி யுத்தத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தற்போது உயிருக்குப் போராடி வரும் மியன்மார் முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுப்பார்களா?

மியன்மார் முஸ்லிம்களின் வரலாறு

15 ம் நூற்றாண்டு – மியன்மாரில் இஸ்லாமிய எழுத்தோலைகள், நாணயங்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

1799 – மியன்மார் – பர்மா தொடர்பில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் ரோஹிங்யா எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

1871 – மியன்மார் – பர்மாவின் ராகின் மாநிலத்தில் 58000 முஸ்லிம்கள் வாழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

1911 – மியன்மார் – பர்மாவின் ராகின் மாநிலத்தில் 179000 முஸ்லிம்கள் வாழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

1977 – மியன்மார் – பர்மாவில் ஏற்பட்ட கலவரம் காரணமாக சுமார் இரண்டு லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்திற்கு இடம் பெயர்ந்தனர். இவர்களில் சுமார் 12000 பேர் பட்டினியால் பங்களாதேசத்தில் உயிரிழந்தனர். பின்னர் இவர்களில் மீதமிருந்தவர்கள் மீண்டும் மியன்மாருக்கு திரும்பி ராகின் மாநிலத்தில் குடியேறினார்கள்.

1982 – ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மார் – பர்மா குடியுரிமையில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

1989 – பர்மா என்றிருந்த நாட்டின் பெயர் மியன்மார் என்று மாற்றப் பட்டது.

1991 – கலவரம் காரணமாக 250000 க்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்திற்கு இடம் பெயர்ந்தார்கள்.

1992 – 1993 – இடம் பெயர்ந்தவர்களில் 50 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பலவந்தமாக மீண்டும் மியன்மாருக்கு செல்ல நிர்பந்திக்கப்பட்டனர்.

2012 ஜனவரி மாதம் – பதிவு செய்யப்பட்ட 29000 ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்தில் வாழ்ந்தார்கள். இவர்கள் 1991ல் பங்களாதேசத்தில் குடியேறியவர்கள். எனினும் பதிவு செய்யப்படாத இரண்டு லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்தில் வாழ்ந்தனர்.

2012 – எட்டு லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மாரில் வாழ்வதாக தரவுகள் கூறுகின்றன.

2014 – கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

Related posts

வடக்கு போக்குவரத்து அமைச்சருக்கும், தனியார் போக்குவரத்துச் சங்க உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு.

wpengine

இன்று பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதிகள் சற்று நிதானமாக நடப்பது அவசியம்

wpengine

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை விஜயம்!

Editor