Breaking
Sun. Nov 24th, 2024
(எஸ். ஹமீத்)
”தானாடாவிட்டாலும் தன் தசையாடும்” என்றொரு முதுமொழி வழக்கிலுள்ளது. நமது உறவுகளுக்கு ஒரு துன்பம் நேர்கையில் அவர்களுடனான கருத்து முரண்பாடுகளினால் நாம் அந்தத் துயரம் பற்றி அதிகமாகக் கவலைப்படாவிட்டாலும், அதையும் தாண்டி இயற்கையாகவே நமது தசைகள் துடிக்கத் தொடங்கிவிடும் என்பதைக் குறிக்கவே இந்தப் பழமொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், மியன்மாரில் நமது உறவுகள், நமது சொந்தங்கள், நமது சமூகத்தின் அங்கத்தினர்கள் கொடுமைக்குள்ளாவது கண்டு இங்கே, இலங்கையில் நமது உடல்கள் எல்லாம் நடுங்கி ஆடுகின்றன; நமது உயிர்களெல்லாம் அதிர்ந்து ஆடுகின்றன; நமது தைசைகளெல்லாம் துடிதுடித்து ஆடுகின்றன.

எத்தனை கோரமான கொடுமைகள் அங்கே அரங்கேற்றப்படுகின்றன. வயோதிபர், இளைஞர்கள், பெண்கள், சிறுவர்களென்ற எந்தப் பாகுபாடுகளுமின்றி அரக்கத்தனம் கொண்ட மியன்மாரின் இராணுவமும் பௌத்த பேரினவாதிகளும் நமது சொந்தங்களை உச்சபட்ச சித்திரவதைகளுக்கும் கொலைகளுக்கும் உள்ளாக்கி வருவது கண்டு இங்கே நமது குருதி கொப்பளித்தெழுகிறது.

வெகு சர்வ சாதாரணமாக முஸ்லிம்களை வெட்டிக் கொலை செய்கிறார்கள்.  கொன்றது மட்டுமன்றி, இறந்த மையித்துகளின் மீது வெறி கொண்டு மீண்டும் மீண்டும் கத்தியால் குத்திக் கிழிக்கிறார்கள். அத்தோடும் நின்றுவிடாது தலை, கைகள், கால்கள் என அங்கம் அங்கமாக வெட்டியெடுக்கிறார்கள்.

சிறுவர்களை மிக மோசமாகத் தாக்குகிறார்கள். சங்கிலியால் பிணைக்கப்பட்ட சிறுவர்களை வட்டமாக உட்கார வைத்துக் காட்டுமிராண்டித்தனமாகப் பெரும் தடி கொண்டு அடிக்கிறார்கள். சப்பாத்துக் கால்களினால் முகம், முதுகு, இடுப்பு என எல்லாப் பாகங்களிலும் மிக மோசமாக உதைக்கிறார்கள்.

வீடியோ வடிவத்தில் நான் இதுவரை பார்த்த சில காட்சிகள் இவை. நமது கண்களுக்குத் தெரியாமல் இன்னமும் பல கொடூரங்கள் அங்கு நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
கலிமாச் சொன்ன ஒரே காரணத்திற்காக நமது சகோதர, சகோதரிகள் தமது மேலான உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் காடுகளுக்குள் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். ஆயினும் மியன்மார் இராணுவம் தேடித் தேடி அவர்களை இரத்த வேட்டையாடி வருகிறது.

ஒப்புக்குச் சப்பாணி கொட்டுவது போலவே ஐ.நா. சபையும் உலகளாவிய மன்னிப்புச் சபைகளும் மனித உரிமை இயக்கங்களும் இந்த விடயத்தில் நடந்து கொள்கின்றன. சாதாரண கண்டன அறிக்கைகள் மட்டுமே வெளிவருகின்றனவே தவிர, இந்த அநியாயத்தைத் தடுத்து நிறுத்தும் காத்திரமான எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. ஆனாலும், உலகளாவிய முஸ்லிம் உம்மா மியன்மார் விடயத்தில் ஆக்ரோஷம் கொண்டு எழ வேண்டும்.

துருக்கியின் அதிபர் எர்துகான் போல, ஏனைய முஸ்லிம் நாடுகளின் தலைவர்களும் மியன்மார் முஸ்லிம்களுக்கெதிரான கொடூரமான வன்செயலை நிறுத்துவதற்குத் தங்கள் பங்களிப்புகளை வழங்க முன்வர வேண்டும். இதற்காக, முஸ்லிம் நாடுகளின் தூதராலயங்களுக்கு நம்மால் எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். அதேநேரம் மியன்மாரின் தூதராலயங்களுக்கும்  எண்ணிக்கையற்ற கண்டனங்களைக் கடிதம் மூலம், பேக்ஸ் மூலம், மின்னஞ்சல் மூலம்  அனுப்ப வேண்டும்
முஸ்லிம் புத்திஜீவிகள் இந்த அவலமான நேரத்தில் தங்கள் உச்சபட்ச சேவைகளை அல்லாஹ்வுக்காகச் செய்ய வேண்டும். மியன்மாரில் நடக்கும் அநியாயங்களை உலகிற்கு இன்னுமின்னும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நடவடிக்கைகளில்  அவர்கள் அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் அனைவரும் வல்ல அல்லாஹ்வைத் தொழுது, நோன்பு நோற்று,  கையேந்தி, கண்ணீர் விட்டு அழுது பிரார்த்திப்போம். அந்த வல்ல றஹ்மான் நமது சகோதரர்களைப் பாதுகாத்து அருள் புரிவானாக; ஆமீன்!
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *