(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஞாயிற்றுக்கிழமை நாடுபூராகவும் ஏற்பட்ட மின்தடையின் காரணமாக மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிட்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் வெளிச்சத்திற்காக ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி தளபாடங்களில் பரவியதில்; வீட்டின் ஒருபகுதி தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளது.
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரி வீதியில் வசிக்கும் கோமலன் சுதா என்பவரின் வீட்டிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9.00மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீட்டில் இருந்த கட்டில்,அலுமாரி,கதிரை உள்ளிட்ட தளபாடங்கள்,கடவுச்சீட்டு,தேசிய அடயாள அட்டை,சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள்;,உடுதுணிகள்,வீட்டுக் கூரை,யன்னல்,கையடக்க தொலைபேசி,மின்சார உபகரணங்கள் என்பன முற்றாக எரிந்துள்ளது.
குறித்த வீட்டில் நானும் எனது கணவரும் வசிப்பதாகவும் தனது கணவர் இன்னும்; ஒரு மாதத்தில் வெளிநாடு செல்லவிருந்ததாகவும் இந்நிலையிலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும்,இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் கோமலன் சுதா தெரிவித்தார்
மெழுகுவர்த்தி வீட்டு தளபாடங்களில் பரவி வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்ததையடுத்து வீட்டின் கூரைப்பகுதியினூடாக தீயை அணைத்தாகவும் வீட்டின் உரிமையாளர் கோமலன் சுதா மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.