புதிய மின் இணைப்புக் கட்டணத்தை செலுத்துவதற்கு இயலாத உள்நாட்டு மின் நுகர்வோர்களை கண்டறிவதற்கான ஒரு வழிகாட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் மின்சாரத் தொழிற்றுறைக்கான ஒழுங்குறுத்துநராக இயங்கிவரும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, இந்த வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
2009ம் ஆண்டு 20ம் இலக்க திருத்தப்பட்ட இலங்கை மின்சாரச் சட்டத்தின் 27ம் பிரிவுக்கு அமைய இவ் வழிகாட்டி அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான தமித்த குமாரசிங்க “இலங்கை அரசானது 2017ம் ஆண்டில் வறுமையை இல்லாதொழிக்க உறுதி பூண்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தவணைக் கொடுப்பனவு முறைமைக்கான வழிகாட்டியானது எந்தவொருவரும் ஒரு மின்சார இணைப்பினை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.” என்று கூறினார்.
இந்தத் தவணைக் கொடுப்பனவு முறைமைக்கான வழிகாட்டியில், இயலுமை உள்ளவர்கள் மாதாந்த தவணைக் கொடுப்பனவு அடிப்படையில் புதிய மின் இணைப்பினை பெறலாம் எனவும் இந்த மாதாந்த தவணைக் கொடுப்பனவு ஆனது, அறிவிக்கப்பட்ட குடும்ப வருமானத்தின் 5% இனை விட அதிகமாகாது எனவும் குறிப்பிட்டு உள்ளது. அதிகபட்ச பணக்கழிப்பானது ரூ.1,500 இனை விட அதிகரிக்காது என்பதும் இத்தவணைக் கொடுப்பனவு முறை மூலமாக 24 மாதங்களில் கட்டணத்தை செலுத்தலாம் என்பதுவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டிக்கமைய, இலங்கை மின்சார சபை மற்றும் லங்கா எலெக்ரிசிட்டி கம்பனி (LECO) ஆகியவை ஒரு புதிய மின் இணைப்பு அளித்தலுக்கான செலவினை மாதாந்தத் தவணைகளில் மீளப் பெற்றுக்கொள்ளும். நியம வரித்தீர்வை உடன்படிக்கையின்படி, வரித்தீர்வை மற்றும் விநியோக உரிமதாரரால் விதிக்கப்பட்ட பிற கட்டணங்களும் மாதாந்தத் தவணைகளில் பெற்றுக் கொள்ளப்படும்.
இலங்கை அரசாங்கத்தின் தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களமானது, குடும்ப வருமான, செலவு கருத்துக்கணிப்பை செய்து [Household Income & Expenditure Survey (HIES)] அதன் அடிப்படையில், நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்கள் என்ற பதத்தை வரையறுத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்ட நடுத்தர வருமானத்தின் 50% இனை விடவும் குறைவாக மாத வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் திவிநெகும திட்டத்தின் பயனாளிகள் ஆகியோர் மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் புதிய மின் இணைப்பு வழங்குகையில் செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில், இந்தத் தவணைக் கொடுப்பனவு முறைமைக்கு இயலுமை பெறுகின்றனர். HIES 2012/2013 அறிக்கைக்கமைய, இலங்கையின் நடுத்தர வருமானம் ரூ. 30,814 ஆகும். நடுத்தர வருமானமுடைய ஒரு குடும்பத்தின் மாதாந்த வருமானத்தின் 50% ஆனது, வறிய குடும்பங்களின் சராசரி வருமானத்தைப் பிரதிபலிக்கின்றது.
இதற்கு மேலதிகமாக, மேற்கூறப்பட்ட பிரமாணங்களை ஒரு உள்ளூர் நுகர்வோர் எதிர்கொள்ளாதவிடத்து, அவரிடமிருந்து பரிசீலனைக்கான வேண்டுகோள் எழுந்தால், மின்சார சேவை வழங்கும் அமைப்புகள் இது போன்ற பிற பிரமாணங்களை (criteria) நியாயமான முறையிலும் வெளிப்படைத்தன்மை கொண்ட்தாகவும் கைக்கொள்ளலாம். ஓய்வூதியம் பெறுவோர், ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் 55 வயது தாண்டிய முதியோர் மற்றும் வீட்டுக் கட்டிட நிலமைகள் ஆகியவற்றையும் அவ் அமைப்புகள் பிரமாணங்களாக கொள்ள இயலும். இந்த வழிகாட்டி தொடர்பில், மின்சார சேவையை வழங்குகின்ற அமைப்புகளான இலங்கை மின்சார சபை மற்றும் லங்கா எலெக்ரிசிட்டி கம்பனி (LECO) ஆகியவற்றுக்கு ஏற்கனவே அறியத்தரப்பட்டுள்ளதுடன், வழிகாட்டி தற்பொழுது பின்பற்றப்பட்டு வருகின்றது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.