முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ரங்காவினால் செலுத்தப்பட்ட வாகனம் வீதியை விட்டு விலகி மதில் மேல் மோதியதில், அவருக்கு பாதுகாப்பிற்காக சென்ற பொலிஸ் கான்ஸ்டபில் உயிரிழந்தார். விபத்துக்குள்ளான வாகனம் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிலினால் செலுத்தப்பட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து. விபத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் ரங்கா கைது செய்யப்படவுள்ளார்.
ஸ்ரீ ரங்காவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ் சட்ட பிரிவினால் வட மாகாண பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிகாரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வாகன விபத்தை மறைப்பதற்கு உதவிய பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு எதிராக விசேட விசாரணை பிரிவை பயன்படுத்தி, விசாரணை நடத்தி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் சட்ட பிரிவு பரிந்துரை செய்துள்ளது.
ஸ்ரீ ரங்கா நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படும் போது 2011ஆம் ஆண்டு செலுத்தி சென்ற ஜுப் வண்டி செட்டிக்குளம் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பாதுகாப்பு பொலிஸ் கான்ஸ்டபில் உயிரிழந்தார்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வாகனத்தை உயிரிழந்த குறித்த பொலிஸ் அதிகாரி ஓட்டியதாக பின்னர் பொலிஸாருடன் இணைந்து அறிக்கை தயாரித்து நீதிமன்றில் பீ. அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பீ. அறிக்கை வவுனியா பொலிஸ் மேற்பார்வையாளர் அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
ஸ்ரீ ரங்கா செலுத்தி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அமைச்சர் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார் எனவும், விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வாகனத்தை உயிரிழந்த குறித்த பொலிஸ் அதிகாரி ஓட்டியதாகவும் தயாரிக்கப்பட்ட பீ. அறிக்கை, பொலிஸாருக்கு காணப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அப்போதைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய உட்பட பொலிஸ் அதிகாரிகள் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி 4.30க்கு இடம்பெற்றுள்ளது. ஸ்ரீரங்காவினால் செலுத்தப்பட்ட அந்த ஜுப் வண்டி பதிவு செய்யப்படாத land cruiser prado ரக வாகனம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சி – மன்னார் வீதி நோக்கி பயணித்த அந்த வாகனம் வீதியை விட்டு விலகி செட்டிக்குளம் வைத்தியசாலை மதிலில் மோதியுள்ளது. இந்த விபத்தில் ஸ்ரீ ரங்கா பாதுகாப்பிற்கு சென்று அமைச்சர் பாதுகாப்பாளர் பிரிவு உறுப்பினர் உயிரிழந்த பின்னர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பலசூரிய ஸ்ரீ ரங்காவை காப்பதற்காக பொலிஸாருக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய அப்போதைய வவுனியா பிரிவு பொறுப்பாக இருந்த பொலிஸ் பிரதானியில் இருந்து பலர் வாகனத்தை ஸ்ரீ ரங்கா ஓட்டவில்லை என சாட்சி தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீ ரங்கா தான் வாகனத்தை ஓட்டியதற்கான பல சாட்சிகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. ஸ்ரீரங்காவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் வாகத்தை செலுத்தியதாக ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.