முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட விளையாட்டு மைதான நிர்மாணப்பணிகளைப் பூர்த்தி செய்யவும், வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளின் மைதானங்களை அபிவிருத்தி செய்யவும் தேவையான நிதியை வரவு – செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கவுள்ளோம் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய வடக்கிலுள்ள விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பான கேள்விக்குப் பதிலளித்தபோதே மேற்கண்டவாறு அமைச்சர் நாமல் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு மைதானத்துக்குக் காணி தெரிவு செய்யப்பட்டு இணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது. ஆனால், அந்தக் காணிக்குத் தனியார் உரிமையாளர் ஒருவர் உரிமை கொண்டாடும் நிலையில் நிர்மாணப்பணிகள் தடைப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு 32 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது. இணைப்புக் குழு அனுமதி பெறப்படவுள்ளதோடு 2021இல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படும்.
மன்னார் எமில் நகர பொது விளையாட்டு மைதானப் பணி தொல்பொருள் பிரச்சினையால் தடைப்பட்டது. அந்தப் பிரச்சினை தீர்ந்துள்ளது. விளையாடக் கூடிய நிலையில் மைதானம் உள்ளதால் அதனைப் பயன்படுத்த முடியும். எதிர்வரும் காலத்தில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வடக்கிலுள்ள விளையாட்டு மைதானங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.தேவையான நிதி ஒதுக்கப்படும்.
கடந்த காலத்தில் கிளிநொச்சியில் சகல வசதிகளுடன் விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால், அது பயன்பாடின்றி நாசமடைந்தது.
அரசியல் நோக்கில் கட்டடங்கள் கட்டுவதால் பயனில்லை.தேவையான வசதிகளை நாம் வழங்குவோம். வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்து முன்னேற்றுவோம். அவற்றுக்கு 200 மீற்றர் ஓடுபாதைகளை நிர்மாணிக்கவும் இருக்கின்றோம்.130 மீற்றர் செயற்கை ஓடுபாதை அமைக்கவும் இருக்கின்றோம்.
மன்னாரில் பாடசாலை விளையாட்டு மைதானம் கிடையாது. கல்வி அமைச்சு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன் பணிகளும் விரைவில் தொடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.