Breaking
Mon. Nov 25th, 2024

மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற சம்பவத்தை அமைச்சர் றிசாத்துடன் தொடர்புபடுத்தி முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை அமைச்சர் நசீர், மாகாண சபை உறுப்பினர் தவம் ஆகியோர் அடுத்தடுத்து நடாத்திய ஊடகவியலாளர் மாநாடுகள், அமைச்சர் றிசாத் மீது கொண்ட காழ்ப்புணர்வையும் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எழுச்சி தங்களது கட்சியினதும், தமது எதிர்கால பிரதிநிதித்துவத்தினதும் இருப்புக்கு பாதிப்பை வெளிப்படுத்திவிடுமோ என்ற அச்சத்திலுமே இடம்பெற்றதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்டீன், மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், சம்மாந்துறை அமைப்பாளரும், முன்னாள் உபவேந்தருமான கலாநிதி இஸ்மாயில், பொத்துவில் அமைப்பாளரும், முன்னாள் எம்.பியுமான எம்.ஏ.மஜீத் (எஸ்.எஸ்.பி) ஆகியோர் இன்று நண்பகல் (08/09/2016) இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கூட்டாக இதனைத் தெரிவித்தனர்.

கலாநிதி ஜெமீல் இங்கு கருத்துத் தெரிவித்தபோது

கடந்த ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மாவடிப்பள்ளி வாசிகசாலை, நீண்டகாலமாக திறக்கப்படாதிருந்தபோது, மக்கள் காங்கிரசின் பொதுத்தேர்தல் பிரசாரத்துக்காக எமது கட்சித் தலைவர் றிசாத் பதியுதீன், அந்தப் பிரதேசத்துக்கு வருகைதந்த வேளை, மாவடிப்பள்ளி மக்கள் அவரிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். தமது ஊர்ப் பள்ளிவாசலுக்கு உதவுமாறும், தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள வாசிகசாலையை திறப்பதற்கு பங்களிப்புச் செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

“இது தொடர்பில் எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தபோதும், இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை. வாசிகசாலைக்கான பொருட்களை பெற்றுத்தந்தால் திறப்பதற்கு வழிசெய்வதாக, பிரதேசசெயலர் தங்களிடம் கூறுகின்றார்” என அவர்கள் முறையிட்டனர். தேர்தல் முடிந்த பின்னரும் அவர்கள் விடுத்த இந்தக் கோரிக்கையை அமைச்சர் றிசாத் ஏற்றுக்கொண்டார். அமைச்சரின் சொந்தநிதியின் மூலம் பெற்றுக்கொடுத்த வாசிகசாலைக்குத் தேவையான தளபாடங்கள் மற்றும் பொருட்களை அவரது கையினாலேயே வழங்குவதற்கு நாம் முடிவெடுத்திருந்தோம்.

கடந்த முதலாம் திகதி அம்பாறை மாவட்டத்துக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் விஜயம் செய்திருந்தபோது, மாவடிப்பள்ளி புதிய வாசிகசாலையையும், பழைய வாசிகசாலையையும் திடீரென மூடிவிட்டதாக அறிந்தோம். திட்டமிட்டு வாசிகசாலைகளை மூடிவிட்டு, அட்டாளைச்சேனையில் இடம்பெறும் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த, நீர்வழங்கல் சபையின் நடமாடும் சேவைக்காக பிரதேச செயலரை அங்கு அழைத்திருந்ததாக அறிந்தோம்.

மாவடிப்பள்ளிப் பாதையில், லொறியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் அமைச்சருடன் சென்று நாங்கள் ஒப்படைத்துவிட்டு, “நீங்கள் அவற்றைப் பொறுப்பெடுத்து வாசிகசாலைக்கு கையளியுங்கள்” என கூறிவிட்டு வந்தோம். நாங்கள் அங்கு கூட்டம் வைக்கவுமில்லை. அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசவுமில்லை.

இந்தப் பொருட்களை வாசிகசாலைக்கு அமைச்சர் றிசாத் வழங்கக் கூடாது என்ற உள்நோக்கிலேயே மு.கா பழைய வாசிகசாலை மற்றும் புதிய வாசிகசாலையையும் மூடச்செய்து, ஒரு சதியை மேற்கொண்டிருந்தது. நீண்டகாலத்தின் பின்னர் தமது கிராமத்துக்குக் கிடைத்த வாய்ப்பை இழந்துவிட்டோம் என்ற ஆத்திரத்தினாலும், ஆவேசத்தினாலும் அங்கு கொதித்து நின்ற ஒருசில இளைஞர்கள் பூட்டை உடைத்து, கண்ணாடிக்கும் சிறு சேதம் விளைவித்தனர். சம்பவம் நடைபெற்றபோது அங்கு கடமையில் நின்ற பொலிசாருக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இது நன்கு தெரியும்.

அமைச்சர் றிசாத்தை இந்த சம்பவத்துடன் மு.கா தொடர்புபடுத்துவது இவர்களது கேவலமான, சின்னத்தனமான அரசியலையே வெளிப்படுத்தி நிற்கின்றது. சேதத்தின் பெறுமதி சுமார் 125௦௦ ரூபா என பொலிசார் மதிப்பிட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களும் தானாகவே பொலிசில் சரணடைந்து. பின்னர் பிணையில் விடப்பட்டனர். எனவே, அம்பாறை மாவட்டத்துக்கு உருப்படியான, எந்தவிதமான அபிவிருத்தியையும் செய்ய வக்கில்லாத அரசியல்வாதிகள், அமைச்சர் றிசாத்தை வீணாக வம்புக்கிழுத்துள்ளனர். அத்துடன் ஐந்து இலட்சம் ரூபா சேதம் விளைவிக்கப்பட்டதாக ஒரு அப்பட்டமான பொய்யையும் மாகாணசபை உறுப்பினர் தவம் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் தூணாகக் காட்டிக்கொள்ளும் இந்தத் தவம், மு.கா தலைவர் ஹக்கீமின் நெறிப்படுத்தலில் இந்தப் புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். மர்ஹூம் அஷ்ரபின் மரணத்தில் வெடிக்கொளுத்தி, மகிழ்ச்சியை வெளியிட்டு, பாற்சோறு உண்டு மகிழ்ந்து, கட்டியிருந்த வெள்ளைக் கொடிகளைக் கழற்றி கொண்டாடிய இந்தத் தவம், கடந்த காலங்களில் இவரை வளர்த்தெடுத்த சேகு இஸ்ஸதீன், அதாவுல்லாஹ் ஆகியோருக்கும் துரோகம் விளைவித்தவர்.

பிரதேசவாதத்தையே தனது அரசியல் தொழிலாக பயன்படுத்திவரும் தவம், மாவடிப்பள்ளி மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால், அந்தப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியிருப்பார். ஆனால், அதற்குத் திராணியற்ற தவம், இப்போது பெட்டைக்கோழி போல அக்கரைப்பற்றில் இருந்து கூவியிருக்கின்றார் என்று ஜெமீல் தெரிவித்தார்.

செயலாளர் சுபைர்டீன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

அமைச்சரைப் பற்றிக் கருத்துக் கூறுவதற்கு தவத்துக்கு எந்த யோக்கியதையும் இல்லை. மக்கள் காங்கிரஸில் அவர் இணைய முயற்சித்தபோது, கட்சித்தலைவர் இடங்கொடுக்காததே அவரது அரைவேக்காட்டுத்தனமான இந்த உளறல்களுக்குக் காரணம் என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலாநிதி இஸ்மாயில், எம்.ஏ.மஜீத் (எஸ்.எஸ்.பி) அகியோரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *