முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது
எந்தவொரு பிரதான பாதைகளும் குறிப்பிட்ட சமூகத்துக்கோ, இனத்துக்கோ, பிரதேசத்துக்கோ சொந்தமானதல்ல. அது எல்லோருக்கும் பொதுவானது. அதில் யாரும் தனி உரிமை கொண்டாட முடியாது.
அந்தவகையில் மாவடிப்பள்ளி – கல்முனை பாதை புனரமைப்பு பற்றி எழுந்துள்ள சர்ச்சை பற்றியதுதான் இந்த கட்டுரை ஆகும்.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் கரையோர பிரதேசங்கள் ஒற்றையடி பாதைகளாகவே உள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையில் உள்ள நீண்ட பிரதான பாதைகளுக்கு மாற்றுப் பாதைகள் இல்லை.
இப்பிரதேசங்களில் அதிகமான மக்கள் வாழ்கின்ற காரணத்தினாலும், வீதிகள் ஒடுக்கமாக உள்ளதனாலும் வாகன நெரிசல்கள் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் வீதிகளை கடந்து செல்வதும், குறித்த நேரத்துக்குள் பயணிப்பதும் மிகவும் சிரமமான காரியமாகும்.
இப்பிரதேசம் ஒற்றையடி பாதையாக இருக்கின்றதன் காரணமாக பாதைகளில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டாலோ அல்லது வேறு தடைகள் ஏற்பட்டாலோ அப்பாதையினால் வாகனங்களை நகர்த்த முடியாத நிலை ஏற்படுகின்றது.
கடந்த காலத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்பாக வீதி மறியல் போராட்டம் நடாத்தியபோது இரு பக்கமாகவும் தூர இடங்களிலிருந்து வந்த வாகனங்களினால் நகர முடியவில்லை. பின்பு அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலுமிருந்து பொலிசார் வரவழைக்கப்பட்டு பாதைகள் திறந்துவிடப்பட்டது.
அதுபோல் ஹர்த்தால் போன்ற மக்கள் போராட்டம் நடைபெற்றாலும் அவசர காரியங்களுக்காக மாற்று பாதைகள் மூலம் பயணிக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.
ஆனால் மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, யாழ் குடாநாடு போன்ற நகரங்களில் ஏராளமான பிரதான பாதைகள் உள்ளன. அதுபோல் அனுராதபுரம், குருநாகல், கண்டி, கொழும்பு போன்ற நகரங்களில் பாதைகளை இனம் காண்பதற்கு கடினமான நிலையில் அங்கு ஏராளமான பிரதான பாதைகள் உள்ளன.
யுத்த காலத்தில் மாலை ஆறுமணி முதல் மறுநாள் காலை ஆறு மணி வரைக்கும் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதான பாதை மூடப்பட்டுவிடும். அதற்கு இடைப்பட்ட நேரத்தில் சம்மாந்துறையை தாண்டி பயணிக்கின்ற அனைவரும் மாவடிப்பள்ளி – கல்முனை பாதையினையே பயன்படுத்தி வந்தனர்.
காரைதீவு பிரதான பாதை மூடப்பட்டதன் காரணமாக மாவடிப்பள்ளி – கல்முனை கிறவல் பாதை அப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
அதிவேக நெடுஞ்சாலைகளை அரசாங்கம் அமைத்தபோது அங்கு பாதைகள் இருக்கவில்லை. அதற்காக பொதுமக்களின் நூற்றுகணக்கான காணிகள் சுவீகரிக்கப்பட்டு புதிதாக பாதைகள் உருவாக்கப்பட்டது. இதற்காக எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால் நீண்டகாலமாக இருளடைந்த நிலையில் இருக்கின்ற மாவடிப்பள்ளி – கல்முனை பாதையை புனரமைப்பு செய்து காப்பட் இடுவதனால் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மாறாக அதனால் அனைவரும் நன்மை அடைவார்கள்.
மாவடிப்பள்ளி – கல்முனை பாதை புனரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் கூறுகின்ற காரணம் ஏற்புடையதல்ல. இவ்வாறு நல்ல விடையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பதிலாக அவர்களது பிரதேசங்களில் உடைந்துகிடக்கின்ற பாதைகளை புனரமைப்பு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
அவ்வாறு அவர்களது சொந்த பிரதேசங்களின் உள்ளூர் பாதைகளை புனரமைப்பு செய்ய முடியாத நிலையில், தங்களது பலயீனங்களை மறைக்கும் நோக்கில் மக்களை குழப்பி தங்களது அரசியல் செல்வாக்கினை பாதுகாக்க முற்படுவதுதான் இந்த நியாயமற்ற எதிர்ப்பு கோசமாகும்.
எனவே மாவடிப்பள்ளி – கல்முனை பாதை மட்டுமல்ல, எதிர்காலங்களில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் கரையோர பிரதேசங்களில் ஒற்றையடி பாதையாக உள்ள பிரதான பாதைகளுக்கு மேலதிகமாக வேறு பிரதான பாதைகள் அமைக்கப்படல் வேண்டும்.