இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டபோது அதற்கு அனுமதி வழங்கி அமைதியாக இருந்த முஸ்லிம் தலைமைகள் இன்று விகாரை நிர்மாணம் பற்றி பேசுவதும் எதிர்ப்பதும் வேடிக்கையானது. மாயக்கல்லி மலையில் பிரச்சினையே புத்தர் சிலைதான். எனவே முஸ்லிம் தலைமைகள் முதலில் புத்தர் சிலை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
மாயக்கல்லி மலைப்பிரதேசத்தில் விகாரை நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், மாயக்கல்லி மலையில் பௌத்த தேரர்கள் மற்றும் பெரும்பான்மை இனத்தவர்களால் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரான முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவரின் அனுமதி பெறப்பட்டே புத்தர் சிலை வைக்கப்பட்டதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரும் தெரிவித்திருக்கிறார்கள்.
அன்று மலையில் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கியவர்களே இன்று விகாரை நிர்மாணத்தை எதிர்க்கிறார்கள். அப்பகுதியில் எவ்வித நிர்மாணமும் வராது, மேற்கொள்ளப்படமாட்டாது ஜனாதிபதி இந்த உறுதியை வழங்கியிருக்கிறார் என்றெல்லாம் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
எனவே, பிரச்சினை இப்போது விகாரை நிர்மாணமல்ல. மலையில் உள்ள புத்தர் சிலையேயாகும். மாயக்கல்லி மலையில் புத்தர்சிலை இருக்கும் வரை இந்தப்பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
கடந்த 30 ஆம் திகதி இறக்காமத்துக்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி அப்பகுதியில் எந்த நிர்மாணப்பணிகளும் முன்னெடுக்கப்பட மாட்டாதென உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.