மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலியாற்று பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமான முறையில் மூன்று இடங்களில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மணலை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் வழிகாட்டலின் கீழ் மன்னார் இலுப்பைக் கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் குறித்த மணலை தொகுதியினை கைப்பற்றியுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை பாலியாறு காட்டுப்பகுதிக்குள் அனுமதிப்பத்திரமின்றி மணலை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த இரண்டு இடங்களையும், பாலியாறு ஊர் பகுதியில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த ஒரு களஞ்சிய இடத்தினையும் கண்டுப்பிடித்து பொலிஸார் அவ்விடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத சுமார் 45 கியூப் மணலையே பொலிஸார் இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட மணலை மன்னார் நீதிமன்றத்தில் கையளிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும் மன்னார் மாவட்டத்தில் முசலி,நானாட்டான்,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தொடர்ச்சியாக மண் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.