ஊடகப்பிரிவு
அப்பாவி முஸ்லிம்கள் மீது கடந்த திங்கட்கிழமை(3) மாலை திட்டமிட்டு நடாத்தப்பட்ட காடைத்தன தாக்குதலால் சேதமாக்கப்படட பள்ளி வாசல்கள், மத்ரஸாக்கள், முஸ்லிம்களின் வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் உடமைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (14) பார்வையிட்டார்.
மினுவாங்கொட கொட்டாரமுல்ல, பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில் ஹெட்டிப்பொல, கொட்டம்பபிட்டி மற்றும் பிங்கிரிய தேர்தல் தொகுதியில் கினியம உள்ளிடட பாதிக்கப்பட்ட இடங்களுக்கே அமைச்சர் ரிஷாட் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்களான இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நஸீர் அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ், பிரதேச சபை உறுப்பினர் இர்பான், கட்சியின் முக்கியஸ்தர் ஹுசைன் பைலா அடங்கிய குழுவினர் விஜயம் செய்தனர்.
இதன் போது, இந்த வன்முறையால் பாதிக்கப்படட முஸ்லிம்களையும் சமய பெரியார்களையும் சந்தித்து அமைச்சர் குழுவினர் ஆறுதல் கூறினர். பாதிப்புக்குள்ளான முஸ்லிம்க்ள் மிகவும் அச்சமுற்ற நிலையில் தமக்கு நேர்ந்த அவலங்களையும் காடையர்களால் தாம் துன்புறுத்தப்பட்ட விதங்களையும் கண்ணீர் மல்க அமைச்சரிடம் விபரித்தனர் சுமார் 500 தொடக்கம் 600 பேர் வரை பஸ்களிலும் மோட்டார் சைக்கிளிலும் சிறிய ரக வண்டிகளிலும் வந்த காடையர்கள் கத்திகள், பொல்லுகள், கற்களால் தாக்குதல் நடத்தியதாகவும் மனம் போன போக்கில் சகட்டுமேனிக்கு இந்த வெறித்தனத்தை அவர்கள் புரிந்ததாகவும் கவலை வெளியிட்டனர்.
நன்கு திட்டமிட்டு வெளியிடங்களில் இருந்து வந்தே இந்த கும்பல் இந்த அட்டகாசத்தை புரிந்ததாகவும் குறிப்பிட்டனர்.
கொட்டாரமுல்லையில் வாளுக்கு இரையாகி சித்திரவதை செய்யப்பட்டு மரணமான நான்கு பிள்ளையின் தந்தையான, பெளசுல் அமீர்டீனின் ஜனாஸா வீட்டுக்கு சென்ற அமைச்சர், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் வழங்கினார். ஜனாஸா வீட்டுக்கு வந்த மாதல்கந்த புண்ணியசார தேரருடன் அமைச்சர் உரையாடினார் “பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த சமூகங்களுக்கு இடையில் புரிந்துணர்வும் விழிப்புணர்வும் ஏற்பட வேண்டியதன் அவசியம் அங்கு வலியுறுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பிலும், சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவது தொடர்பிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தமது சேத விபரங்களை கிராம சேவகர்களின் ஊடாக வழங்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் உறுதியளித்தார்.