கட்டுரைகள்பிரதான செய்திகள்

மாதம்பை பிரச்சினை! ஏன் புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகள் அதில் கவனம் செலுத்தவில்லை?

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)

புனித பிரதேசம் என்ற போர்வையில் பௌத்த ஆதிக்கத்தினை மேலோங்க செய்து முஸ்லிம் மக்களின் வாழ்வு நிலங்களையும், பள்ளிவாசல்களையும், வியாபார தளங்களையும் சுவீகரிக்கும் திட்டம் பௌத்த தீவிரவாதிகளினால் நாட்டின் பல பாகங்களிளும் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், அதே புனித பிரதேசம் என்ற போர்வையில் “மாதம்ப” பிரதேசத்தில் முஸ்லிம் மக்களின் நிலங்களை சுவீகரிக்கும் இன்னுமொரு கபடதிட்டம் கிறிஸ்தவ மேலாதிக்க வாதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புத்தளம் மாவட்டத்தின் கொழும்பு – சிலாபம் வீதியில் அமைந்துள்ள மாதம்பை பிரதேசத்தின் “பழைய நகர்” எனப்படுவது நூற்றாண்டு காலமாக முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வரும் ஒரு கிராமம் ஆகும். இங்கே வரலாற்று ரீதியாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்கு பல ஆதாரங்களுடன் காணி உறுதி பத்திரங்களும் உள்ளது.

அப்படி இருந்தும் மாதம்ப பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களை விரட்டியடித்து அவர்கள் ஆண்டாண்டு காலங்களாக வாழ்ந்துவருகின்ற நிலங்களையும், பள்ளிவாசல்களையும் சுவீகரிக்கும் நோக்கில் ஒருசில சிங்கள கிறிஸ்தவர்களினால் திட்டமிட்ட சதித்திட்டங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப்பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று செல்வந்தர் ஒருவருக்கு சொந்தமான தனியார் காணியில் நிருவகிக்கப்பட்டு வருகின்றது. இந்த தேவாலயத்தினை சுற்றி சிங்கள பௌத்தர்களும், மேற்கு பக்கமாக முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஆனால் தேவாலயத்தினை அண்டிய பிரதேசங்களில் சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்துவருகின்ற பிரதேசங்கள் எதனையும் புனித பிரதேசத்துக்குள் உள்ளடக்காமல், முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவருகின்ற பிரதேசத்தினை மட்டும் தேவாலயத்துடன் சேர்த்து புனித பிரதேசமாக 1999 ஆம் ஆண்டு வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி பிரகடனத்துக்கு அன்றைய ஆட்சியில் இருந்த உயர் அரசியல் சக்திகளின் செல்வாக்கு பிரயோகிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த தேவாலயத்தினை விஸ்தரித்து, வாகனத்தரிப்பிடம், பூங்கா, கோபுரம் என இன்னும் பல அபிவிருத்திகளை அப்பிரதேசத்தில் மேற்கொள்ளவும் நிலங்கள் தேவைப்படுகின்றது. இதற்கென ஏற்கனவே புனிதப்பிரதேசம் என பிரகடனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் நிலங்களை சூறையாடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் ஆட்சியில் முஸ்லிம்களை போன்றே கிறிஸ்தவர்களும் நடத்தப்பட்டார்கள். இதனால் இந்த கிறிஸ்தவ தேவாலய விஸ்தரிப்புக்கான எந்த முயற்சிக்கும் பச்சைக்கொடி காண்பிக்கப்படவில்லை. இதே தேவாலயம் ஒரு பௌத்த விகாரையாக இருந்திருந்தால் அது சாத்தியாமகியிருக்கும். ஆனால் இன்றய நல்லாட்சியில் இந்த தேவாலயத்தினை பரிபாலித்துவருகின்ற செல்வந்தர் ஒரு அரசியல் செல்வாக்குள்ளவராக கானப்படுவதனாலேயே தேவாலய விஸ்தரிப்பு என்ற போர்வையில் முஸ்லிம் மக்களின் காணிகளை சுவீகரிக்க முற்படுகின்றார்.

இந்த பிரச்சினை இன்று நேற்று உருவானதல்ல. இது 1991 ஆம் ஆண்டிலிருந்து அவ்வப்போது சிறு சிறு உரசல்கல்போன்று இப்பிரச்சினைகள் உருவெடுப்பதும், பின்பு அப்பிரதேச முஸ்லிம் மக்களின் எதிர்ப்பின்காரனமாக அமர்ந்துகிடப்பதுமாக இருந்தது. இந்தநிலையிலேயே கடந்த வாரம் முஸ்லிம் மக்களின் நிலங்களை நிலஅளவை செய்யும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் உசாரடைந்த அப்பிரதேச முஸ்லிம் மக்கள் வீதியில் இறங்கி எதிர்ப்பு  ஆர்ப்பாட்டம் செய்யதனர்.

இதன் பிற்பாடு இந்த விடயம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. தலைவர் ஹக்கீம் அவர்கள் அப்பிரதேச பள்ளிவாசல் நிருவாகிகளுடனும், ஊர் மக்களுடனும் இந்த பிரச்சினை சம்பந்தமாக விரிவான முறையில் கலந்துரையாடினார்.

அதன்பின்பு இன்று இப்பிரச்சினை சம்பந்தமாக உரிய அமைச்சருடனும், மாவட்ட, பிரதேச செயலாளர், மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், ஜனாதிபதி அவர்களை சந்தித்து குறித்த புனித பூமி வர்த்தமானி அறிவித்தலை ரத்துச்செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் செறிவாக வாழ்கின்ற புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அல்லாத பல முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தும் இப்படியான மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாது ஏன்? தங்களை தலைவர்களாக மட்டும் ஊடகங்கள் மூலமாக சித்தரிக்க எடுக்கின்ற முயற்சிகளை இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்தலாமே என்று அப்பிரதேச மக்கள் கோருவதனை காணக்கூடியதாக உள்ளது.

அத்துடன் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள், முஸ்லிம் மக்களின் இவ்வாறான எந்தவித பிரச்சினைகளையும் தீர்க்க முற்படாமல் இருந்துவிட்டு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பல முயற்சிகளை மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு இறுதிக்கட்ட தீர்வு கண்டு அது வெற்றியளிக்கும் தருவாயில், முந்தியடித்துக்கொண்டு அதனை தானே செய்ததாக ஊடகங்கள் மூலமாக விளம்பரம் செய்வதனை அவ்வப்போது காணக்கூடியதாக இருக்கின்றது.

எனவே அதுபோன்று மாதம்ப பிரதேச பிரச்சினையிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலையிட்டு இருப்பதனால் அதற்கான தீர்வு வருகின்றபோது, ரவுப் ஹக்கீமுக்கு எதிராக அரசியல் செய்கின்ற சிலர் அதனை தானே செய்ததாக அறிக்கைவிட காத்துக்கொண்டு இருக்கின்றார்களா என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

 

Related posts

மக்களின் நிலை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்

wpengine

இலவச உம்ரா திட்டம்: 2ஆம் குழு மே முதல் வாரம் மக்கா பயணம்

wpengine

தாஜுதீன் படுகொலை : என்னை தாக்க முற்பட்டவர்களை விசாரணை நடத்துக

wpengine