மாகாண சபைகள் ஒழிக்கப்பட்டால், மாகாண சபைகளின் அதிகாரங்கள் உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச கடந்த 11 ஆம் திகதி நடந்த பேச்சுவார்த்தையின் போது கூறியதாக வெளியாகியுள்ள தகவலில் உண்மையில்லை என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளை அழைத்து கடந்த 11 ஆம் திகதி நடத்திய பேச்சுவார்த்தையின் போது பசில் ராஜபக்ச அப்படியான எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையை ஒழிக்க வேண்டும் என ராஜாங்க அமைச்சர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்து வருகிறார்.
அவரது இந்த நிலைப்பாட்டுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாகாண சபைகள் ஒழிக்கப்பட்டால் அதன் அதிகாரங்கள் பிரதேச சபைகளுக்கு வழங்கப்படும் என பசில் ராஜபக்ச கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.