Breaking
Mon. Nov 25th, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை)

கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாகாண சபை தேர்தல் திருத்த சட்ட மூலம் கொண்டுவரப்பட்டிருந்தது. இது முஸ்லிம்களுக்கு பல வகையில் பாதிப்பாக அமையும் என்ற வகையில் கூறப்பட்ட போதும் அப் பாதிப்புக்களை குறைக்குமுகமாக இரு செயற்பாடுகள் முஸ்லிம் அரசியல் வாதிகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அவ்வாறானதாக 60 : 40 என்ற அடிப்பையில் இருந்த விகிதாசாரத்தை 50 : 50 என்ற வகையில் மாற்றியமைத்ததும் தொகுதி மீளமைத்தலின் போது மூன்றில் இரண்டு பெரும் பான்மை பெறப்பட வேண்டும் எனவும் திருத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இதில் ஐம்பதுக்கு ஐம்பது என்ற முறைமையினூடாக பெரிதான நன்மைகள் இருப்பதாக கூற முடியாது. இருந்த போதிலும் தொகுதி மீளமைத்தல் விடயத்தில் முஸ்லிம்கள் மிகக் கவனமாக இருப்பதன் மூலம் சேதாரங்களை ஓரளவு குறைத்துகொள்ளலாம். அதற்கு எமது அரசியல் வாதிகளினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற செக் வைக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக தொகுதி மீளமைத்தலின் போது மூன்றில் இரண்டு பெரும் பான்மை பெறப்பட வேண்டுமா என்ற விடயத்தை அலசுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

இது பற்றி மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தின் நான்காம் பிரிவு பேசுகிறது. சுருக்கமாக அதிலுள்ள எமக்கு தேவையான சில முக்கிய விடயங்கள் ..

தொகுதி மீளமைத்தலுக்காக ஒரு குழு நியமிக்கப்படும். இக் குழுவில் நியமிக்கப்பட்டடும் ஐவரும் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர். 4 (1)
குறித்த குழுவானது அமைச்சருக்கு அறிக்கையை சமர்பிக்கும். அவர் அறிக்கை கிடைக்கப்பெற்று இரு வாரங்களுக்குள் சமூகமளிக்காதோர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்பித்தல் வேண்டும். 4 (11)
அவ்வாறு முழு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆங்கீகாரம் கிடைக்காதவிடத்து பிரதம அமைச்ச தலைமையிலான ஐந்தாட்களை கொண்ட ஒரு மீளாய்வு குழு அமைக்கப்படும். 4 (12)
அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்பிக்கப்படும் 4 (14)
சனாதிபதியின் பிரகடனத்தின் மூலம் குழுவினால் சமர்பிக்கப்பட்ட தேர்தல் தொகுதிகள் வெளியிடப்படும் 4 (15)

குறித்த தொகுதி மீளமைப்புக்காக ஜனாதிபதியால் ஒரு குழு நியமிக்கப்படும் என்ற விடயத்தை மாற்றி ஏதோ ஒரு சுயாதீன அடிப்படையிலான முறையில் மாற்றி இருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். இதன் மூலம் ஜனாதிபதியால் அவருக்கு சார்பானவர்களே நியமிக்கப்படுவர். இதன் பின்னால் உள்ள தொகுதி மீளமைத்தலை சட்டமாக்கும் பாகம் பலமாக இருந்தால் இது பற்றி அதிகம் சிந்திக்க தேவையில்லை.

இதில் எமது அரசியல் வாதிகள் கூறியுள்ளது போன்று (அனைத்து கட்சி சார்ந்தவர்களும் கூறியுள்ளனர்) எங்குமே மூன்றில் இரண்டு பெரும் பான்மை வேண்டும் என்ற விடயம் இல்லை. பிரதமர் தனிப்பட்ட முறையில் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. பிரதமர் தனிப்பட்ட முறையில் எமது அரசியல் வாதிகளுக்கு வாக்குறுது வழங்கியிருந்தாலும் குறித்த இயற்றப்பட்ட சட்டம் என்ன கூறுகிறதோ அதனையே செய்ய வேண்டும். இதில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர வேண்டுமாக இருந்தால் மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையே வேண்டும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விட முழு பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரம் வேண்டும் என்பது பலமானதே என்ற சிந்தனை எழலாம். பாராளுமன்றத்தின் முழு அங்கீகாரம் என்பது சிறிதும் சாத்தியமில்லை. இலங்கையில் நிலவிய நீண்ட கோரிக்கையான நிறைவேற்று ஜனாதிபதி அதிகார குறைப்புக்காக கொண்டுவரப்பட்ட பத்தொன்பதாம் சீர் திருத்தத்துக்கே பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எதிர்த்து வாக்களித்து ஒரு எதிர்ப்பு வாக்கை பதிவாக்கி இருந்தார்.அப்படியானால் இதற்கு ஒரு எதிர்ப்பு வாக்காவது விழ மாட்டாதா என்ன?

சாத்தியமற்ற ஒன்றை ஏன் அரசு செய்ய வேண்டும். அங்கு தான் விடயமுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வேண்டும் என கூறப்பட்டால் அது அரசின் தன் மானத்துக்கு சவாலாக அமையும். முழு பெரும்பான்மை என்பது சாத்தியமற்றது. அது அவமானத்துடனான சவாலாகவும் அமையாது. முழு பெரும்பான்மை பெறுதல் ஒரு சம்பிரதாயத்துக்கே இடம்பெறும். சரி இது நிறைவேறாவிட்டால் அதனை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும் என்ற விடயமே அனைத்தையும் பூச்சியத்தால் பெருக்கின்றது.

அப்படி அது நிறைவேறாது போனால் பிரதமர் தலைமையிலான குழு அமைக்கப்படும். அக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியை சென்றடையும். தொகுதி மீளமைத்தல் அங்கீகாரம் பெரும். இதில் என்ன கடினம் உள்ளது? பிரதமர் ரணில் முஸ்லிம்களுக்கு சார்பானவர்கள் என்றால் இதனை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். இச் சட்ட மூலம் முஸ்லிம்களை பாதிக்கும் என்று தெரிந்தும் கொண்டுவந்தவர்களுக்கு முஸ்லிம்கள் பாதிக்கப்படும் வகையில் தொகுதி அமைத்தால் தான் என்ன? எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் வாதிகள் பிரதம அமைச்சரை நம்புகிறார்களோ தெரியவில்லை. ஆரம்பத்தில் நியமிக்கப்படும் குழு கூட பிரதமர்,ஜனாதிபதியின் ஆலோசனையின் படி தான் இயங்கும். ஜனாதிபதி நியமிக்கும் குழு யாரை திருப்தி செய்யும்? அது எப்படியானவர்களை நியமித்தாலும் சரியே!

எனவே, மீளமைக்கப்பட்ட தொகுதி முஸ்லிம்களுக்கு பாதகமாக அமைந்தாலும் எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் கூறியதை போன்று சட்ட அங்கீகாரத்தை பெற எந்தவித சிறு சிக்கலுமில்லை.

 

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *