வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் வடக்கு மாகாண சபை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும் பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்குமாறு வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தினச் சந்தைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தை உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனை சந்தைக்கு முன்பாக இடம்பெற்றுவரும் இந்த உண்ணாவிர போராட்டத்தில், உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி. சிவமோகன், கே. கே. மஸ்தான், வட மாகாணசபை உறுப்பினரான ஏ. ஜெயதிலக, சிறிடெலோ கட்சியின் செயலாளர் நாயகம் கா. உதயராசா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பதற்கான இடத்தினை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.