Breaking
Sun. Nov 24th, 2024

( மயூரன் )

மாகாண சபைகளைப் புறக்கணித்து எமது மக்கள் சார்பில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அக் கூட்டத்தில் இணைத்தலைவர்களில் ஒருவராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

ஒருங்கிணைப்புப் குழுக் கூட்டம் என்பது மாவட்ட மக்களின் நலன் கருதியே நடைபெறுகின்றது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால் அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்று கூறாது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்று இக் கூட்டங்கள் அழைக்கப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு.

இரு அதிகார மையங்களை ஒருங்கிணைப்பதால் இது ஒருங்கிணைப்புக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. அந்த அதிகார மையங்கள் எவை என்று பார்த்தால் மத்திய அதிகார மையமும் மாகாண அதிகார மையமுமே அவை. ஆகவே ஒரு பக்கம் மத்தியின் பாலான ஒருங்கிணைப்பு அலகு மறுபக்கம் மாகாணம் பாலான ஒருங்கிணைப்பு அலகு. ஐம்பது சதவிகிதம் மத்தி ஐம்பது சதவிகிதம் மாகாணம்.

இவை இரண்டும் இணைந்து செயற்படவே ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதிலே மத்தி ஐம்பது பேர்களை நியமிக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் மத்தியின் ஐம்பது சதவிகித அலகுக்குள் தான் அடங்குவர். மாகாண அதிகார மையத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடியவர்கள் முதலமைச்சர், அமைச்சர்கள் அல்லது மாகாணசபை உறுப்பினர்கள்தான். அவர்கள் அடுத்த மாகாண ஐம்பது சதவிகிதத்திற்குள் அடங்குவர்.

எனவே மத்தியில் நியமிக்கப்படும் 50 பேரும் ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப் பிரசன்னமானாலும் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவர் தானும் வருகை தராவிட்டால் அது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமாக சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.

இந்தக் கருத்தைத்தான் நான் பல கூட்டங்களிலும் கூறி வந்துள்ளேன். அவற்றை அரசியல் ரீதியாகப் பாவித்து என்னை விமர்சித்தவர்கள் இதனை சட்ட ரீதியாகப் பார்க்க வேண்டுகின்றேன். ஏனென்றால் இது நீதிமன்றங்களுக்குச் செல்லக் கூடும்.

2013 ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு முன்னர் மாகாணசபை நடைமுறையில் இருக்கவில்லை. அதன் முன்னர் எப்படி நடந்தது என்பது இப்பொழுது பொருத்தமில்லை. ஆனால் மாகாணசபை வந்ததன் பின்னர் அதன் பிரதிநிதியின் பங்குபற்றல் இல்லாது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் செல்லுபடியற்றவை என்பதை நாங்கள் யாவரும் மனதில் வைத்திருப்போமாக.

எந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தொடங்க முன்னரும் மாகாணசபையைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர் யார் என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். பிரதேச செயலர்கள் இதைக் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டுகின்றேன்.

அதிமேதகு ஜனாதிபதியிடம் என்சார்பில மாவட்டங்களில் அல்லது பிரதேச மட்டத்தில் பிறிதொருவரை நியமிக்க அனுமதி கோரியும் துரதிரஷ்டவசமாக அதற்குப்பதிலில்லை. முன்னைய ஆளுநர் கௌரவ பள்ளிகக்கார அவர்களும் சட்டப்படி என் சார்பில் ஒருவரை நியமிக்க உரித்துத்தரப் பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டார்.

எனினும் நான் தற்போது பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டங்களுக்கு என் சார்பில் சிலரை நியமித்தே வருகின்றேன். அதன் சட்டவலு கேள்விக்குரியது. யாராவது ஒருவர் வழக்கொன்றைப் பதிந்து குறிப்பிட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு விடயம் அனுமதிக்கப்பட்டது என்று கூறுவதை கேள்விக்கிடமாக்கி அதில் முதலமைச்சர் பிரசன்னமாகாததாலும் அவர் சார்பில் இன்னொருவர் பிரதிநிதித்துவப்படுத்த அவருக்கு அதிகாரம் வழங்கப்படாததாலும் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட அனுமதி செல்லுபடியற்றது என்று வாதாடலாம்.

மாகாணத்தின் சட்டவலுவுள்ள அனுமதி பெற்றால்த்தான் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மானம் சட்டவலுவுற்றிருக்கும்.

இதைப் பகிரங்கமாகக் கூறுவது ஆபத்தானது என்றாலும் இங்கிருக்கும் யாவரும் இதன் முக்கியத்துவத்தை அறிந்திருப்பது அவசியம். ஏனென்றால் ஆளுக்கு ஆள் வெவ்வேறு விமர்சனங்களைத் தந்து வருகின்றார்கள். ஜனாதிபதியுடன் நாங்கள் இது பற்றிப்பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

ஆகவே ஒருங்கிணைப்பு மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் என்பதும் மாகாணம் சார்பில் மாகாண சபையில் இல்லாதோர் எவரும் அதனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்ற கருத்தையும் நான் இதுவரை விளக்கியுள்ளேன்.

அடுத்து அரசாங்க அதிபருடன் இணைந்து நாங்கள் கௌரவ பிரதம மந்திரிக்கு இவ் வருடம் பிப்ரவரி மாதம் 15 ஆம் திகதியன்று கையளித்த எமது தேவைகள் பற்றிய ஆவணத்திற்கு மேலதிகமாக வடமாகாணம் சம்பந்தமாக ஏதேனும் திட்டங்கள் பற்றி ஆவணங்களை எவராவது கையளித்துள்ளார்களா என்பது பற்றி விளக்கம் தேவை.  அரசாங்க அதிபர் அதுபற்றி விளக்கம் தருவார் என்று நம்புகின்றேன்.

அரசாங்க அதிபரையும், பிரதேச செயலரையும், மாகாணப் பிரதம செயலாளரையும் முன்வைத்தே அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. இது தவறு. எமது அரசாங்க அதிபர், பிரதேச செயலர், பிரதம செயலாளர் ஆகியோர் சிரேஷ்ட அரசாங்க அலுவலர்கள். எமது அன்புக்கும் மதிப்பிற்கும் பாத்திரமானவர்கள். தொழிற் திறன் கொண்டவர்கள். ஆனால் மக்களின் தேவைகள் பற்றி உரியவர்களுக்கு எடுத்துரைக்கவே பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

மாவட்ட ரீதியாக மிகவும் அடிமட்டத் தேவைகளை அறிந்தவர்கள் மாகாண சபை உறுப்பினர்களே. எனவே தான் மாகாண சபையைப் புறக்கணிக்காமல் எம்முடைய கருத்துக்களையும் அறிந்தே மேற்படி கோரிக்கைகள் முன்னளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

அரசியல் மட்டத்தில் எடுக்க வேண்டிய தீர்மானங்களை நிர்வாக மட்டத்தில் எடுப்பது எமது மக்களுக்குப் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பது எனது கருத்து. உதாரணத்திற்கு அரசாங்க அலுவலர்கள் இராணுவத்திற்குப் பயந்து எமது மக்களின் காணிகளை இராணுவத்திற்கு வழங்குவது மக்களைப் பாதிக்கும்.

அலுவலர்களால் அவை பற்றி இராணுவத்துடன் முரண்பட முடியாது. அதனை மக்கள் பிரதிநிதிகளாகிய நாமே செய்ய வேண்டும். இதை யாவரும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். மாகாண சபைகளைப் புறக்கணித்து எமது மக்கள் சார்பில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மாகாண சபைகள் வர முன்னர் நடைபெற்ற நடவடிக்கைகள் இனி மாற வேண்டும்.  இது பற்றி தம்பி மாவை அவர்கள் சென்ற ஜனவரி மாதக் கூட்டத்தில் கூறிய ஒரு கருத்தை நான் முழுமையாக வரவேற்கின்றேன். அவர் கூறினார் –

“மத்திய அரசிடமே அரசியல் அதிகாரம், அபிவிருத்தி மீதான அதிகாரம் குவிந்து கிடக்கின்றது. மாகாண சபைகளுக்குப் போதிய அதிகாரங்கள் இல்லை. அரசியல்த் தீர்வு ஒன்று ஏற்படும் வரையில் மிக முக்கியமாக வடக்குக் கிழக்குப் பிரதேசத்தை மக்களை மீளக் கட்டியெழுப்புவதில் அரசு, மாகாண அரசு அவ்வப் பிராந்தியங்களின் மக்கள் பிரதிநிதிகள், சர்வதேச சமூகம் ஆகியன ஒன்றிணைந்து ஒட்டு மொத்தமாக, மாவட்ட மட்டங்களின் ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தில் ஒரு முகமாக வேலை செய்வது தான் இன்றைய தேவையாகவுள்ளது”.

அதனைத்தான் நானும் வலியுறுத்துகின்றேன். நாங்கள் யாவரும் எமது மாகாணத்தையும், மாவட்டத்தையும் முன்னேற்ற ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றேன் என தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *