மாகாண சபைத் தேர்தல்களுக்கான எல்லை நிர்ணய சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வது குறித்து தேர்தல் ஆணைக்குழு கடும் நிபந்தனை விதித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல்களுக்கான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கடந்த வாரம் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
எனினும் குறித்த சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கொண்டே நிறைவேற்றப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு கண்டிப்பான நிபந்தனை விதித்துள்ளது.
ஏதேனும் காரணங்களினால் சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போனால் பிரதமர் நியமிக்கும் குழுவொன்றிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இரண்டு மாதம் கழித்து மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதன் போதும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டே குறித்த சட்டமூலம் நிறைவேற்றிக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு நிபந்தனை விதித்துள்ளது.
குறித்த சட்டமூலம் நிறைவேற்றிக் கொள்ளப்படும் வரை தற்போதைக்கு கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களின் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.
அதே போன்று எதிர்வரும் செப்டம்பரில் மத்திய, வடமேல் மற்றும் வடமாகாண சபைகளின் ஆயுட்காலம் நிறைவடையவுள்ளது.
அவ்வாறான நிலையில் மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தை எதிர்வரும் செப்டெம்பருக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியாது போனால் பழைய விகிதாசார முறையின் கீழ் மத்திய, வட மேல் மற்றும் வடமாகாணங்களுக்கான தேர்தல்களை நிறைவேற்ற சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.