Breaking
Sun. Nov 24th, 2024

(வை. எல். எஸ். ஹமீட்)

மாகாண தொகுதி நிர்ணய அறிக்கை பாராளுமன்றிற்கு வருகிறது. 222 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு 13 தொகுதிகளே இருப்பதாக கூறப்படுகிறது. முஸ்லிம்களின் விகிதாசாரப்படி ஆகக்குறைந்தது 21தொகுதிகள் இருக்கவேண்டும். போனஸ் தவிர்ந்த மொத்த ஆசனங்கள் 437. முஸ்லிம்களுக்கு 42 ஆசனங்களாவது கிடைக்க வேண்டும்.

கிழக்கில் பெறக்கூடிய அதிகூடிய ஆசனம் 13, அபூர்வமாக 14 பெறலாம். வடக்கில் 2. முல்லைத்தீவு இம்முறை சந்தேகம். வடகிழக்கில் அதிகூடிய தொகுதிகள் 7. எனவே, வடகிழக்கிற்கு வெளியே 6 தொகுதிகளே மிஞ்சும். அதேநேரம் வடகிழக்கில் 15 ஆசனங்கள் பெற்றால் ஏனைய 27 ஆசனங்கள் வடகிழக்குக்கு வெளியே பெறப்பட வேண்டும். ஆனால் 6 தொகுதிகளைத் தவிர வேறு ஆசனம் பெறமுடியாது. புண்ணியத்தில் தேசியக்கட்சிகள் ஒன்றிரண்டு பட்டியலில் நியமிக்கலாம். உதாரணமாக, சுமார் ஒரு லட்சம் முஸ்லிம் வாக்குகளைக்கொண்ட குருநாகல் மாவட்டத்தில் ஒரு ஆசனம்கூட பெறுவது கடினம். எனவே, பாதி ஆசனங்களையாவது இழக்கப்போகின்றோம். இந்தப் பின்னணியில்தான் தொகுதி நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்திற்கு வருகின்றது.

மூன்றில் இரண்டு தேவை
——————————-
இதனை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. முஸ்லிம் கட்சிகள் இதற்கெதிராக வாக்களிக்க வேண்டும்; என்ற கோசம் பரவலாக எழ ஆரம்பித்திருக்கின்றது. கட்டாயம் எதிர்த்து வாக்களித்தே ஆகவேண்டும். அதேநேரம் அரசும் இவ்வறிக்கை மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் தோற்கடிக்கப்படுவதை விரும்பலாம். அதன்மூலம் தேர்தலை சற்றுத் தாமதிக்கலாம். எனவே, நமது கட்சிகள் தைரியமாக எதிர்த்து வாக்களிக்கலாம். அரசு கோபித்துக் கொள்ளாது. அதன்பின் நடக்கப்போவது என்ன?

சட்டம் என்ன கூறுகிறது?
——————————-
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறத்தவறின் பிரதமர் தலைமையில் பிரதான சமூகங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஐவர் கொண்ட மீளாய்வுக் குழுவை சபாநாயகர் நியமிக்க வேண்டும். அக்குழு தனது மீளாய்வை “ அமைச்சர் ( மாகாண சபைகள் அமைச்சர்) அக்குழுவுக்கு அனுப்பிய இரண்டு மாதத்திற்குள் நிறைவுசெய்து ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். அறிக்கை கிடைத்ததும் உடனடியாக ஜனாதிபதி அதனைப் பிரகடனம் செய்ய வேண்டும்.

இங்கு எழுகின்ற கேள்விகள்:

புவியியல் துறை பேராசிரியர் ஹஸ்புல்லா போன்றவர்களை உள்ளடக்கிய அந்தக்குழுவுக்கே, 13 தொகுதிகளுக்குமேல் செல்ல முடியவில்லை. மீளாய்வுக்குழு மேலும் எட்டுத் தொகுதிகள் உருவாக்கி விடுவார்களா? ஒன்றிரண்டு மாற்றங்கள் சிலவேளை சாத்தியப்படலாம். மேலும் எட்டு தொகுதிகள் உருவாக்கப்பட்டு எமது விகிதாசாரமான குறைந்தது 21 தொகுதிகளைப் பெறுகிறோம்; என்று ஓர் அதீத கற்பனை செய்வோம். மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 21 தொகுதிகளில் மட்டுமா முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். ஏனைய தொகுதிகளில் வாழ்கின்ற மக்களின் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு உறுதி செய்வது?

எல்லோரும் தொகுதி நிர்ணயத்தைப் பற்றி மட்டும்தான் பேசுகின்றார்கள். தொகுதி நிர்ணயத்தில் நம்பங்கை உறுதிப்படுத்தினால்கூட அது பாதிதான். ( 50%). மிகுதி ஆசனங்களின் நிலை என்ன? ( வட கிழக்கில் பட்டியலில் கிடைக்கும் ஒரு சில ஆசனங்களைத் தவிர).

எனது முந்திய கட்டுரைகளில் குறிப்பிட்டதுபோல் தொகுதி எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதால் மாத்திரம் நமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியாது. அதேநேரம் பாராளுமன்றத்தில் இவ்வறிக்கைக்கு எதிராக வாக்களிப்பதன்மூலம் இவ்வறிக்கை அமுலுக்கு வருவதைத் தடுக்கவும் முடியாது. அவ்வாறாயின் தீர்வு என்ன?

தீர்வு, ஒன்றில் பழையமுறையை தொடர்ந்து பின்பற்றுவது அல்லது இரட்டை வாக்கைக் கோருவது. உண்மையில் சட்டமூலத்திற்கு வாக்களிக்கமுன் இந்த இரட்டை வாக்கைக் கோரியிருக்கலாம். அதை இப்பொழுது பேசுவதால் பிரயோசனமில்லை. இப்பொழுதாவது கேளுங்கள்; இல்லையெனில் பழைய முறையைக் கேளுங்கள். உங்கள் முட்டுப்பலத்தை இதற்காவது பயன்படுத்துவீர்களா?

பழைய தேர்தல் முறைக்கு பல கட்சிகளின் ஆதரவு இருக்கின்றது. முயற்சியுங்கள்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *