(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கூட்டு எதிர்க்கட்சி மே தினக் கூட்டத்திற்கு அலையெனத் திரண்டு வந்த மக்கள் வெள்ளமானது மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விரைவில் அரசு ஒன்று உருவாவதனை உறுதி செய்துள்ளது. அவ்வாறு உருவாகும் அரசில் பங்காளிகளாக மாறுமாறு அனைத்து முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் முற்போக்கு முன்னணி அழைப்பு விடுப்பதாக அதன் செயலதிபர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.
இன்று காலை கூட்டு எதிர்க்கட்சி சார்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
மே தினத்திற்குப் பிறகு இந்த நாட்டு மக்களினுடைய எண்ணங்கலெல்லாம் மஹிந்த ராஜபக்ஷ மீது திரும்பியுள்ளது. சரித்திரத்திலே இவ்வளவு மக்கள் வெள்ளம் கூடிய ஒரு மேதினம், இடது சாரி கட்சிகள் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த காலத்தில் கூட, ஏன் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கூட நடக்கவில்லை. அன்று காலி முகத்திடலில் இருந்து பார்க்கும் போது இந்தியக் கடல் பெரிதா அல்லது மைதானத்தில் கூடி இருந்த மக்கள் வெள்ளம் பெரிதா என்ற மலைப்பு பார்ப்போருக்கு ஏற்பட்டது. இதனால் இன்று மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆளுமை மிக உயர்ந்து நிற்கின்றது. சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமல்ல, சிறுபான்மை இன மக்களும் அவர் பக்கம் இப்போது திரும்ப ஆரம்பித்திருக்கின்றார்கள். ஓரக்கண்ணால் அவரைப் பார்த்த முஸ்லிம் மக்கள் கூட இன்று தெளிவு பெற்று நேர் கண்ணால் பார்க்கின்றார்கள். அது மட்டுமல்ல, இம்முறை மஹிந்த ராஜபக்ஷ வினுடைய மேதினத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு கொழும்பிலுள்ள தொழிலதிபர்களும் தனவந்தர்களும் பல வழிகளிலும் உதவி ஒத்தாசைகள் புரிந்தார்கள் என்பதை நாம் முஸ்லிம்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேம்.
எனவே இந்த மே தினத்திற்கு ஒரு நாளும் இல்லாதவாறு கிழக்கு மாகாணத்தில் இருந்து குறிப்பாக அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள்.
அதேபோலதான் வடக்கிலிருந்தும் தமிழ் பேசும் மக்கள் வந்திருந்தார்கள். குறிப்பாக முஸ்லிம் மக்களும் ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள். எனவே அவர்களுடைய எதிர்பார்ப்பும் இப்போது கூடி இருக்கின்றது. இந்த கால கட்டத்தில் அரசில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை உணரமுடிகின்றது.
முஸ்லிம்களின் பிரச்சினைகளை இந்த அரசு தீர்க்கவில்லை என்று ஆளுக்கொருவராக குற்றம் சாட்டும் பணியில்தான் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்களே தவிர, முஸ்லிம்களுக்கு நம்பிக்கை ஊட்டி வாக்குகளைப் பெற்றெடுத்த தலைவர்களால் இந்த நாட்டு முஸ்லிம்சமுதாயத்திற்கு எந்தவிதமான உதவியையும் செய்ய முடியாது என்பதை இன்று முழு சமுதாயமும் நன்றாக உணர்ந்திருக்கின்றது.
எனவேதான் எதிர்காலத்தில் வெகு சீக்கிரத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏற்படவிருக்கின்ற அரசின் பங்காளியாகுமாறு முஸ்லிம் முற்போக்கு முன்னணி அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றது. இதற்கு முஸ்லிம் அமைச்சர்களிடமிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் ஏராளமான பிரதேச தலைவர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது ஒரு திருப்பு முனையாக உள்ளது.
இந்த வேளையில் இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மே தினத்தன்று இரவு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற முஸ்லிம் தனவந்தரினுடைய திருமண நிகழ்வொன்றுக்குச் சென்றிருந்தார். அங்கு திரண்டிருந்த ஏராளமான முஸ்லிம் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் உட்பட அனைவரும் மஹிந்த ராஜபக்ஷவை சூழ்ந்து செல்பி புகைப்படங்களை மிகவும் சந்தோஷத்தோடும் உற்சாகத்தோடும் எடுத்துக் கொண்டனர்.
இவையெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திலே அவர் பற்றி எழுந்த தப்பான போக்கு நீங்கி எதிர்காலத்திலே இந்த நாட்டில் மீண்டும் நல்லாட்சி உருவாகி முஸ்லிம் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கின்ற வர்த்தகத்தை ஊக்குவிக்கும் ஓர் அரசாங்கத்தை மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் உருவாக்குவார் என்ற நல்ல நம்பிக்கை இப்போது அனைத்து மக்கள் மத்தியிலும் பிறந்திருக்கின்றது.
இந்த அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதி மீதும் பிரதம அமைச்சர் மீதும் வெறுப்புக் கொண்டுள்ள முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து மஹிந்த ராஜபக்ஷவோடு கைகோர்த்து அதன் மூலமாக முஸ்லிம் சமுதாயத்திற்கு நிம்மதியைப் பெற்றுத் தருவதற்காக வேண்டிய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் – என்று தெரிவித்தார்.