(சுஐப் எம்.காசிம்)
நாட்டின் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் ஒவ்வொரு சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அரசியல் எழுச்சிகள், விழிப்புக்களின் பின்னணிகளில் பல புறச்சூழல்கள் பங்காற்றியுள்ளன.
1977 இல் ஏற்பட்ட தமிழர்களின் எழுச்சியில் கல்வித் தரப்படுத்தல், தனிச் சிங்களச் சட்டம், திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் பின்புலமாகச் செயற்பட்டன. இந்தப் புறக்காரணிகளை இன உணர்வுக் கோஷங்களாகவும் அரசியல் மூலதனமாகவும் பயன்படுத்தி ஒட்டு மொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்க முடிந்தமை தமிழினத்தின் அரசியல் எழுச்சியே. இதே சாயலுடைய பின்புலங்கள், புறச் சூழல்களை வைத்தே 1989இல் கிழக்கில் சகல முஸ்லிம்களையும் முஸ்லிம் காங்கிரஸால் ஒற்றுமைப்படுத்த முடிந்தது.
அப்போது கிழக்கில் இடம்பெற்ற ஆயுதக் குழுக்களின் அட்டகாசங்கள், மோதல்கள், வன்முறைகள், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் மீது காட்டப்பட்ட பாரபட்சங்களால் புறச்சூழலில் முஸ்லிம்கள் அதிக நெருக்குதல்களை எதிர்கொண்டனர். இந்நெருக்கடிகளே முஸ்லிம்களை திடீர் எழுச்சிக்குள் திணித்தது.
எனினும், தென்னிலங்கையில் இது போன்ற எழுச்சிகள் ஏற்பட்டதாகக் கூற முடியாதுள்ளது. ஆனால், அரசியலில் சிங்களச் சமூகம் பல தடவைகள் விழிப்படைந்துள்ளது. பண்டா – செல்வா ஒப்பந்தம், ஜே.ஆர் –ராஜீவ் உடன்படிக்கை, டட்லி -செல்வா உடன்படிக்கை உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் விடயங்கள் அனைத்தும் தென்னிலங்கையில் விழிப்பூட்டப்பட்டன. அதிக வருடங்கள் எதிர்க்கட்சியில் இருந்து அலுத்துப்போன கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றப் பயன்படுத்தும் ஆக எளிய யுக்திகளே இந்த விழிப்புணர்வுகள். இந்த யுக்திகளை நம்பியே ராஜபக்ஷக் கூட்டம் இன்று பல காய்களை நகர்த்துகிறது. அண்மையில் நடத்தப்பட்ட “கொழம்பட்ட ஜன பலய” மக்கள் திரட்சி இவ்வாறான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கான வெள்ளோட்டங்களாகவே இன்று பலரால் பார்க்கப்படுகிறது. எதிரே வரவுள்ள தேர்தல்களில் அதிகாரங்களை ஒரே பாய்ச்சலில் பற்றிக்கொள்ளும் பல திட்டங்கள் இன்னும் வெளிவராதுள்ளன.
ஏற்கனவே, வெள்ளோட்டம் விட்ட “கொழம்பட்டஜனபலய” வின் சரியான மதிப்பீடுகள் கிடைத்தவுடன் அடுத்த நகர்வுகளைக் கட்டவிழ்ப்பதுதான் ராஜபக்ஷவின் திட்டம். இதற்கிடையில் இந்தியா சென்ற மஹிந்தவுக்கு புதுடில்லியில் கிடைத்த வரவேற்பும், அங்கு அவர் வெளியிட்ட கருத்துக்களும் மீளத்திரும்பும் ஆட்சியாளர்கள் என்ற பார்வையை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு அடிக்கடி மஹிந்தவின் மவுசு ஏறிச் செல்வதில் அரசாங்கத்தின் போக்குகளும் காரணமாகின்றன.
அடிக்கடி உயரும் எரிபொருள் விலை. கூட்டுப்பொறுப்பின்றிச் செயற்படும் அமைச்சரவை, நாட்டின் ஒருமைப்பாட்டை மீறி வடக்கில் இடம்பெறும் ஆவாக் குழு, புலிகளை உயிரூட்ட விரும்பும் சில அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கள், வட மாகாண முதலமைச்சரின் கடுந்தொனிப் போக்குகளே சிங்களத்தை விழிப்பூட்டுவதற்கு மஹிந்த கையாளவுள்ள கடைசி ஆயுதம். போதாக் குறைக்கு புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும், மஹிந்தவுக்காகவே அடிக்கடி வந்து போகும் ஜெனீவா கூட்டத் தொடர்களும், இதில் நாடு கடந்த தமிழீழ அரசால் முன்வைக்கப்படும் பிரேரணைகளும் சிங்களத்தில் ராஜபக்ஷவுக்கு மகுடம் சூட்டுகின்றன. முன்னாள் ஜனாதிபதிகளால் முடியாமல் போனதை முடித்துவிட்டோம்.
புலிகளையும், டயஸ் போராவையும் தெற்கில் மூலதனமாக்கி, நாடு பிளவுபடப் போவதாகப் போர் முரசு கொட்டினால் போதும், பௌத்த தேசம் விழிப்படையும். இதுவே மஹிந்தவின் அரசியல் கணக்கு.
களமிறக்கப்படவுள்ள திட்டங்கள், யுக்திகளின் வெற்றிகளிலே இக்கணக்கும், கணிப்பீடும் சரிப்படவுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், சிறுபான்மையினரின் தெளிவில்தான் பௌத்த கடும்போக்குவாதம் உயிர்வாழ உள்ளது. இதையுணர்வதில் சிறுபான்மைச் சமூகங்களை விழிப்பூட்டுவது யார்? முஸ்லிம்களின் ஏக தலைமைத்துவத்தைப் பெறுவதில் போட்டியாகச் செயற்படும் முஸ்லிம் தலைமைகள் இவ்விடயத்தை கனகச்சிதமாகக் கையாள வேண்டும். “கொழம்பட்ட ஜனபலயவும்” “மஹிந்தவின் இந்திய விஜயமும்” இப்போதிருந்தே தென்னிலங்கையின் பார்வையை ராஜபக்ஷக்களின் கூடாராத்திற்குள் திருப்பத் தொடங்கியுள்ளன.
இந்த இக்கட்டான சூழலில் மீளத் திரும்பும் நாயகர்களாக ராஜபக்ஷக்களைப் பார்க்கும் மனநிலை பலரையும் தொற்றிக் கொண்டுள்ளதையே காணமுடிகின்றன. குறிப்பாக, தென்னிலங்கை முஸ்லிம்கள் இதில் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
மறைமுகமாக ஏற்கனவே அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களின் எதிரொலியே அம்மக்களை சூழ்நிலைக் கைதிகளாக்கியுள்ளன. இந்நிலைமைகளால் மீண்டுமொரு முறை முஸ்லிம்கள் விட்டில் பூச்சிகளாக விழுந்து விடாமல் தடுக்கப்பட வேண்டும். இதைச் செய்வது யார்?
தென்னிலங்கை முஸ்லிம்களை மட்டுமல்ல முழு முஸ்லிம்களையும் தனித்துவ தலைமைகளிலிருந்து தூரப்படுத்தும் மஹிந்தவின் திட்டத்தை தோற்கடிப்பதில் நல்லாட்சி அரசுக்கும் பெரும் பங்குண்டு. அதேபோன்று மிதவாத சிங்களவர்களை கடும்போக்கு பௌத்த சிந்தனைக்குள் திணிக்கும் செயற்பாடுகளை சிறுபான்மையினர் நிறுத்த வேண்டியுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் குறிப்பாக, வடக்கில் மேலோங்கியுள்ள எழுச்சிச் சிந்தனைகள் உயிர்ப்பெழுவதே மஹிந்தவுக்கு இன்றுள்ள தேவை. இந்த எழுச்சியில்தான் மெதுவாக மறையும் ராஜபக்ஷக்களின் முகங்கள் மீளவும் தலைகாட்டவுள்ளன.
அமெரிக்கப் பிரஜாவுரிமை உள்ள கோட்டாபய தேர்தலில் போட்டியிட முடியாதென்றால் அமெரிக்கப் பிரஜாவுரிமையை உடன் ரத்துச் செய்து விட்டு, ஆடம்பர வாழ்க்கையைத் தூக்கி வீசி சிங்களத்தைக் காப்பாற்ற வந்துள்ளதாக அனல் பிரச்சாரங்கள் அவிழ்க்கப்படும். இதற்குள் கைதுகள், விசாரணைகளை நிறுத்தி தண்டனை வழங்குவதும் அரசுக்கு சிக்கலையே ஏற்படுத்தும். ஏனெனில், தேர்தலுக்காக எதிரே எஞ்சியுள்ள இடைவெளிகளில் ராஜபக்ஷக்களுக்கு எது நடந்தாலும் சிறந்த முதலீடாகவே சிங்களத்தால் வரவு வைக்கப்படும். இதில்தான் அரசுக்கும், சிறுபான்மையினருக்கும் நிதானம் தேவைப்படும்.
கைதுகள், விசாரணைகள் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களின் அழுத்தங்களால், மேலைத்தேய நாடுகளால் செய்யப்படுவதாகவே மஹிந்த தோற்றம் கொடுப்பார்.
இந்தத் தோற்றத்தில் சிங்கள கடும்போக்குவாதம் மீள உயிர்பெறும் என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கணக்கு. இரண்டோடு இரண்டைக் கூட்டினால் நான்கு என்பதும் விடைதான். நான்கோடு பூச்சியத்தைக் கூட்டினாலும் நான்கேதான் விடை என்பதே ராஜபக்ஷக்களின் கணக்கு. காலனித்துவ ஆட்சி மலரப்போவதாக தெற்கிலங்கையில் புரளியைக் கிளப்பினால் நான்குடன் பூச்சியத்தைக் கூட்டிய கதையாகவே போய்விடும். மொத்தத்தில் யுக்தியே இக்கணக்கின் விடைகளில் தங்கியுள்ளன.