மஹியங்கனை விவகாரம் தொடர்பில் ஞானசார தேரருக்கு விடுக்கப்படும் சவால்களை எதிர்கொள்ள பொதுபல சேனா அமைப்பு தயாராகவுள்ளது.
இதேவேளை மஹியங்கனையில் அளுத்கமை போன்ற கலவரம் உருவானால் அதற்கு முஸ்லிம் கவுன்ஸிலே பொறுப்புக் கூறவேண்டும்.
அளுத்கம சம்பவத்தின் பின்னணியும் முஸ்லிம் கவுன்ஸிலே என சந்தேகிக்கின்றோம் என பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலான்த விதானகே தெரிவித்தார்.
மஹியங்கனை சம்பவம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில் பௌத்தர்கள் முஸ்லிம் கொடியையோ குர்ஆனையோ எரிக்கவில்லை. மஹியங்கனையில் முஸ்லிம்களே பௌத்த கொடியையும் வெசாக் கூடுகளையும் எரித்துள்ளார்கள்.
பௌத்த கொடியை எரித்த முஸ்லிம்களை கண்டிக்காது அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குமாறு வலியுறுத்தாது முஸ்லிம் கவுன்ஸில் பொலிஸ் மா அதிபரிடம் ஞானசார தேரருக்கு எதிராக முறையிட்டுள்ளது.
முஸ்லிம் கவுன்ஸிலின் கடமை முஸ்லிம்களை நல்வழிப்படுத்துவதாகவும் முஸ்லிம்களின் தவறுகளைக் கண்டிப்பதாகவும் இருக்க வேண்டும்.
அதைவிடுத்து தொடர்ந்து பௌத்த அமைப்புகளைக் கண்டிப்பதாக இருக்கக் கூடாது. ஞானசார தேரர் மஹியங்கனையில் தனது உரையில் பொலிஸார் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாது விடின் மஹியங்கனையில் அளுத்கமை போன்ற கலவரங்கள் உருவாகலாம் என்றே கூறியுள்ளார்.
இதில் என்ன தவறு இருக்கிறது? இன வாதம் இருக்கிறது?
முஸ்லிம் கவுன்ஸிலின் நடவடிக்கைகள் நாட்டில் இன முறுகல்களைத் தோற்றுவிப்பனவாகவே அமைந்துள்ளன. பௌத்தர்களை இனவாதிகளாகச் சித்தரித்து அரபு நாடுகளில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது பௌத்தர்களின் மனதைப் புண்படுத்தும் செயலாகும்.
நாம் இனவாதிகள் என்றால் எம்முடன் பேச்சுவார்த்தை நடாத்தி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்.
நாம் முஸ்லிம் அடிப்படைவாதத்தையே எதிர்க்கிறோம். ஏனைய முஸ்லிம்களுடன் நல்லுறவையே பேணி வருகின்றோம் என்றார்.