Breaking
Sun. Nov 24th, 2024

லோரான்ஸ் செல்வநாயகம்-

ரிஷாத் பதியுதீனின் கொழும்பு வீட்டில் வேலை செய்த ஹற்றன் டயகம் சிறுமியின் மரணம் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில், அவசியம் ஏற்படுமிடத்து, தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படுமென விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் இஷாலினி எனும் 16 வயது சிறுமி, உடலில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் பொரளை பொலிஸாரும் இணைந்து இந்த தீவிர புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் குற்றவியல் மற்றும் போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதானியுமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இறக்கும்போது 16 வயதும் 8 மாதங்களும் பூர்த்தியான ஹற்றன் – டயகம மேற்கு பகுதியைச் சேர்ந்த இச் சிறுமியின் விவகாரத்தில் இதுவரை வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையப்படுத்தி இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்
மாஅதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டதாவது,..


கடந்த 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று உடலில் தீ பரவியதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இஷாலினி அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலை பொலிஸ் பொறுப்பதிகாரி இது தொடர்பில் பொரளை பொலிஸாருக்கு அறிவித்து முறையிட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.


இது தொடர்பில் கடந்த 07 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்கிரம முன்னிலையில் பொரளை பொலிஸாரால் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டு, இரசாயன பகுப்பாய்வுக்கான உத்தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.


பலத்த தீக் காயங்களுக்குள்ளான இஷாலினி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 73 ஆவது சிகிச்சை அறையில் தீவிர சிகிச்சை பிரிவு 02 இல் சிகிச்சை பெற்று வந்த தையடுத்து கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார்.
இதனையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்ற, கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, வழக்கு இலக்கம் பீ/52944/2/21 க்கு அமைய, உயிரிழந்த இஷாலினி தொடர்பில் பிரேத பரிசோதனைகளை நடத்த உத்தரவிட்டிருந்தார்.


அதன்படி இஷாலினியின் பிரேத பரிசோதனைகள் கொழும்பு சட்ட மருத்துவ நச்சு ஆய்வியல் நிலையம் ஊடாக நடத்தப்பட்டது.
கொழும்பு விசேட சட்டவைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக் இந்த பிரேத பரிசோதனைகளை நடத்தினார். வெளிப்புற தீக்காயங்கள் , கிருமி தொற்றினால் ஏற்பட்ட அதிர்ச்சி மரணத்துக்கான காரணமாக அதில் கண்டறியப்பட்டுள்ளது.


விசேடமாக பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, விசேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக், 03 சிறப்பு குறிப்புக்களை இட்டுள்ளதுடன் அதில் இஷாலினியின் உடலில் 72 வீதமான பகுதி தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் இஷாலினி எந்தவிதமான சித்திரவதைகள், கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லையென குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே இஷாலினி விவகாரத்தில் இருவேறு விடயங்களை மையப்படுத்தி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இவற்றில் ஒன்று அவர் வீட்டு வேலைக்காக சேர்க்கப்படும்போது 16 வயதை பூர்த்தி செய்திருந்தாரா? என்பது தொடர்பிலும் விசாரணைகள் தொடர்கின்றன.

இஷாலினி தரம் 07 வரையே கல்வி பயின்றுள்ளதாக விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளதுடன், அவரது 12 ஆவது வயதில் பதிவான சில சம்பவங்கள் மற்றும் டயகம பகுதியில் இஷாலினியின் வாழ்வில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் கடந்த கால விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று டயகம நோக்கி சென்றுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.


இதனைவிட (17) நண்பகலாகும் போதும், ரிஷாத் பதியுதீனின் வீட்டில் சேவையாற்றிய மற்றொரு இளைஞரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தினர். இஷாலினியின் தாயார், இஷாலினி தீக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பொலிஸ் வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்த, தாக்குதல் சம்பவம் ஒன்றை மையப்படுத்தி அந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக தெரிய வருகிறது.


இவ்வாறான பின்னணியிலேயே, இஷாலினி விவகாரத்தில் அவர் ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு வேலைக்கு அமர்த்தப்படும்போது 16 வயதை பூர்த்தி செய்திருந்தாரா? எனும் சந்தேகம் மேலெழுந்துள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த இஷாலினி, கடந்த 2020 ஒக்டோபர் மாதம் வேலைக்காக கொழும்பு சென்றதாக இஷாலினியின் பெற்றோர் வாக்குமூலமளித்துள்ளனர்.


இஷாலினி சட்டப்படி சிறுமியாக இருக்கும்போது, அதாவது 15 வயது 11 மாதங்களில் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், பொலிஸாருக்கு ரிஷாத் பதியுதீனின் வீட்டார் தரப்பிடமிருந்து வழங்கப்பட்டுள்ள வாக்குமூலங்கள் பிரகாரம், இஷாலினி தமது வீட்டுக்கு கடந்த 2020 நவம்பர் மாதம் 18 ஆம் திகதியே வேலைக்கு வந்ததாகவும் அது முதலே அவர் அங்கு பணியாற்றுவதாகவும் கூறப்பட்டுள்ளது.


ரிஷாத் பதியுதீனின் வீட்டார் தரப்பு வாக்குமூலங்களின் பிரகாரம் இஷாலினி 16 வயதை பூர்த்தி செய்த பின்னரேயே வேலைக்காக ரிஷாத் பதியுனீன் வீட்டுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி அவருக்கு கடந்த 6 மாதங்களின் சுமார் இரண்டரை இலட்சம் ரூபாவரை ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது வாக்குமூலங்களில் கூறப்பட்டுள்ளதாக் அறிய முடிகிறது.
ரிஷாத் பதியுத்தீனின் வீட்டில் கடந்த 05 வருடங்களாக சேவையாற்றிய யுவதி ஒருவர், அங்கிருந்து விலகிய பின்னர், அந்த யுவதியின் தந்தை ஊடாகவே இஷாலினி ரிஷாத்தின் வீட்டுக்கு புதிய சேவையாளராக அழைத்து வரப்பட்டுள்ளமை இதுவரையிலான விசாரணைகள் ஊடாக தெரிய வந்துள்ளது.


இவ்வாறான பின்னணியிலேயே பொலிஸார் தீவிர புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் இஷாலினி வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த இலக்கம் 410/16, பெளத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07 எனும் முகவரியில் அமைந்துள்ள வீட்டில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவியின் தந்தை, தாய் மற்றும் சிறுமியை வீட்டு வேலைக்கு கையளித்த நபர் மற்றும் வீட்டில் வேலை செய்த மற்றொரு இளைஞரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


முன்னதாக கடந்த 03 ஆம் திகதி, காலை 6.50 மணியளவில், கீழ் மாடியில் இஷாலினியின் சப்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது, உடலில் தீ பரவிய நிலையில் அலறுவதை அவதானித்ததாகவும், பின்னர் கால் துடைப்பான் ஒன்றின் துணையுடன் தீயை அனைத்து சிறுமியை அருகில் இருந்த நீர் தொட்டியில் இறக்கியதாகவும் ரிஷாத் பதியுதீனின் மாமனார் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.


அதன் பின்னர் இஷாலினியை 1990 அம்பியூலன்ஸ் வண்டி ஊடாக வைத்தியசாலைக்கு அழைத்து சென்றதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஸ்தல பரிசோதனைகளை பொலிஸ் ஸ்தல பரிசோதனை அதிகாரிகள் முன்னெடுத்ததாகவும், அந்த இடத்தின் சிசிரிவி பதிவுகளையும் ஆராய்ந்ததாக பொலிஸார் நீதிமன்றுக்கு எற்கனவே அறிவித்துள்ளனர்.


இந்நிலையில், தீப் பரவல் தொடர்பில் சேகரிக்கப்பட்டுள்ள சான்றுப் பொருட்களை ( மண்ணெண்ணெய் போத்தல், லைட்டர்)அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெற அனுமதியளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையிலேயே இஷாலினி தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிக்கொண்டதாக, தீவிர சிகிச்சைகளினிடையே வைத்தியர்களிடம் கூறியதாக அறிய முடிகிறது. எனினும் அவர் அவ்வாறு தற்கொலை செய்யும் நோக்கில் தீ மூட்டிக்கொள்வதற்கான காரணத்தை தெரிவித்திருக்கவில்லையென கூறும் பொலிஸார், இவ் விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதாக கூறினர்.

நன்றி தினகரன்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *