வில்பத்துக்கு வடக்கு பிரதேசத்தினை வர்த்தமானி மூலம் ஜனாதிபதி பிரகடனப்படுத்தி அதனை அரசாங்கத்துக்கு சுவீகரிப்பு செய்துள்ளமையினை எதிர்த்து முசலி பிரதேச மக்களின் வாழ்வுரிமையினை உறுதிப்படுத்த அம்மக்களின் வாக்குகளினால் பாராளுமன்றம் சென்றவர்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மட்டுமே இதற்கான மீட்கும் முயற்சியில் ஈடுபடுகின்ற போது அதற்கு எதிராக எமக்குள் இருக்கும் வங்குரோத்து அரசியல் வாதிகள் செயற்படுவதை மக்கள் இனம் காண வேண்டும் என்று தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரின் இணைப்பு செயலாளர் தேசமான்ய இர்சாத் றஹ்மத்துல்லா இந்த நாட்டு முஸ்லிம்கள் தமிழினை தமது தாய் மொழியாக கொண்டுள்ளதால் தமிழ்பேசும் அனைவரும் இம்மக்களது நியாயமான நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரியினால் கைத்தொழில் வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய யாழ்ப்பாணம் சங்கானையில் ஆரம்பிக்கப்பட்ட தையல் பயிற்சி நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நிகழ்வில் அமைச்சரின் பொது மக்கள் தொடர்பபு அதிகாரி சாஹப் மொஹிதீன்,மாந்தை உப்புக் கூட்டுத்தானத்தின் தலைவர் எம்.அமீன்,யாழ் மாநாகர சபையின் முன்னாள் உறுப்பினர் மௌலவி சுபியான்,தொழலதிபர் அமீன் ஹாஜியார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மேலும் இர்ஷத் றஹ்மத்துல்லா உரையாற்றும் போது –
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தமது தாய் மொழியாக தமிழை கொண்டுள்ளனர்.இதன் மூலம் தமிழ் மொழியினை பாதுகாப்பதுடன்,தமிழுக்கு சர்வதேச புகழை பெற்றுக்கொடுக்க ஆற்றிவரும் பணியனை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது.யாழ்ப்பாணத்தில் இருந்த முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட போது தமிழ் மக்கள் கண்ணீரை் விட்டு அழுதனர்.இது தமிழினால் ஏற்பட்ட சகோதர பிணைப்பாகும்.அப்படியானதொரு நிலையில் இதே மாகாணத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை வருகின்ற போது,அநீதி இழைக்ப்படுகின்ற போது அதனை பார்த்துக் கொண்டு தமிழ் உணர்வு கொண்டுள்ளவர்கள் இருக்கமாட்டார்கள்.இது தான் இந்த மொழியின் மகததுவமாகும்,
மன்னார் மாவட்டத்தில் முல்லிக்குளத்திலும்,மறிச்சுக்கட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள பூர்வீக மக்கள் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளது.இதனை விடுவிக்க எடுக்கப்படும் போராட்டங்களை சிலர் அரசியல் லாபங்களுக்காக கொச்சைப்படுத்திவருகின்றனர்.
இவ்வாறு செய்பவர்களை இந்த சமூகம் அடையாளப்படுத்தி அவர்களது இந்த மலினச செயலை தண்டிக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.அமைச்சர் றிசாத் பதியுதீனை பொறுத்த வரை நேர்மையான அரசியல்வாதி,இனம்,மதம்,சமூகம் என்ற பேதமின்றி பணியாற்றிவருபவர்.தான் சார்ந்த சமூகத்திற்கு அநீதி இழைக்கபடுகின்ற போது அதனை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாத உணர்வு கொண்டவர்.இவ்வாறு அம்மக்களுடன் நின்று போராடுகின்ற போது அவரை இலக்கு வைத்து இன ரீதியான பிரசாரங்களை செய்வது கண்டனத்துக்குரியது என்பதை கூற விரும்புகின்றேன்.
இன்று காணாமல் போன தமிழ் சகோதரர்களை மீட்டுத்தருமாறு பெற்றோர்களும் ,அவர்களது உறவுகளும் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.இந்த போராட்டம் என்பது அவர்களது வலியின் வெளிப்பாடு இதனை எவரும் மழுங்கடிப்பதற்கான அரசியல் நகர்வுகளை செய்யக் கூடாது,முள்ளிவாய்க்காலில் இருந்து இருந்து இடம் பெயர்ந்ந பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு அன்று மீள்குடியேற்ற அமைச்சலாக இருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றிய பணிகளை இன்று சிலர் மறந்து இனவாத சாயம் பூசுகின்றனர்.இவ்வாறு பணி செய்ய இன்று இனவாத் பேசுபவர்கள் அன்று எங்கிருந்தார்கள் என்று கேட்கவிரும்புகின்றேன்.கயத்தனமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி சரிந்து இழந்து போயுள்ள அரசியல் இருப்பினை மீள உருவாக்க எடுக்கும் முயற்சியாக இதனை பார்க்கின்றேன்.இந்த பசப்பு வார்த்தைகளுக்கு மக்கள் துணை போகாது கௌரவமான வாழ்க்கையினை உருவாக்க கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தினை அடைந்து கொள்ள நாம் ஒன்றபடுவது காலத்தின் தேவையாகவுள்ளது என்று கூறிய இணைப்பு செயலாளர் தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா தமிழர்களும்,இஸ்லாமியர்களும் தமது மொழியின் பிணைப்பினை உறுதிப்படுத்த தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொள்ள முன்வரவேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார்.
அமரர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் அவர்களுக்கான இந்த நிகழ்வின் போது மௌன அஞ்ஞலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.