மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாதாந்த பரிசோதனைக்குச் சென்ற நூற்றுக்கணக்கான கர்ப்பிணித் தாய்மார்கள் வைத்தியசாலைக்கு முன் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்று காலை மாதாந்த பரிசோதனைக்குச் சென்ற கர்ப்பிணித் தாய்மார்கள் அங்கு மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் மீண்டும் ஒரு தினத்திற்கு வருமாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் விடுமுறையில் சென்றுள்ள நிலையில், பதில் கடமைக்காக மகப்பேற்று வைத்திய நிபுணர் நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையில் பரிசோதனைக்காக சென்ற கர்ப்பிணித்தாய்மார்கள் உரிய முறையில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தாத நிலையில் பிரிதொரு தினத்தில் மீண்டும்
பரிசோதனைக்காக வருமாறு தெரிவித்திருந்தனர்.
தலைமன்னார் முதல் மாவட்டத்தில் உள்ள தூர இடங்களில் இருந்து சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக வந்த நூற்றுக்கணக்கான கர்ப்பிணித் தாய்மார்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
வைத்தியசாலையில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்று வருவதனை கண்டித்தும், நிரந்தரமான ஒரு மகப்பேற்று வைத்திய நிபுணரை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நியமிக்குமாறும் கோரி நூற்றுக்கணக்கான கர்ப்பிணித்தாய்மார்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன், சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வீதியில் இருந்து அகன்று செல்லுமாறு கூறியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரீப் மற்றும், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஆகியோர் வந்தனர்.
எனினும் வைத்திய சாலையின் உயர் அதிகாரிகள் வந்து தங்களுடன் பேச்சு நடத்தி உறுதி மொழி வழங்கினால் மாத்திரமே அவ்விடத்தை விட்டு செல்வோம் என கர்ப்பிணித்தாய்மார்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யூட் ரதனி மற்றும் உதவி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் றோய் பீரிஸ்
ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உயர் அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்திய மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யூட் ரதனி குறித்த பிரச்சினை தொடர்பில் தெரியப்படுத்தினார்.
குறித்த பிரச்சினை தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனிடம் வினவிய போது,
“மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணித்தாய்மார்கள் இரண்டு முறைகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
அதில் ஒரு தரப்பினரை மகப்பேற்று வைத்திய நிபுணரும், ஏனையோரை அங்குள்ள வைத்தியர்களும் பரிசோதனைகளை மேற்கொள்ளுவார்கள்.
ஆனால் மகப்பேற்று வைத்திய நிபுணரின் பரிசோதனைக்குறிய கர்ப்பிணித்தாய்மார்கள் சுமார் 15 பேர் வரை காணப்பட்டனர். ஏனையோரை அங்குள்ள வைத்தியர்கள் பரிசோதிக்க வேண்டும்.
ஆனால் வைத்தியர்கள் பரிசோதிக்க வேண்டிய கர்ப்பிணித்தாய்மார்கள் பரிசோதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை தவறான நடவடிக்கை ஆகும். இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு முழு காரணமும் நிர்வாகத்தில் உள்ள சீரின்மையே.
எனவே வெகு விரைவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளேன்.” என அவர் தெரிவித்தார்.