மன்னார் வீதி விபத்துக்களின் போது விபத்திற்கு உள்ளாகியவர்களை எவ்வாறு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அவசர சிகிச்சைகளை மேற்கொள்வது தொடர்பில் மன்னாரில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தத்ரூப ஒத்திகை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அன்ரன் சிசில் தலைமையில் இன்று காலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது.
இந்த மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வைத்தியசாலை பணியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தத்ரூப ஒத்திகை நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
விபத்து ஒன்று இடம்பெற்றால் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தால் அவர்களை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன் வைத்தியசாலையினை தயார் நிலையில் வைத்தல்.
வெளி நோயாளர் பிரிவில் உள்ளவர்களை வேறு இடத்திற்கு மாற்றி வெளிநோயாளர் பிரிவை தயார் படுத்துதல், வைத்தியர்கள் பணியாளர்கள் தயார் நிலையில் இருத்தல் போன்ற ஒத்திகைகள் இடம்பெற்றுள்ளன.
விபத்து ஒன்று ஏற்பட்ட போது பலர் காயமடைந்திருந்த நிலையில் அவர்களை அம்பியுலன்ஸ் வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கான அவசர சிகிச்சைகளை வழங்குதல், முதலுதவிகளை வழங்குதல் உள்ளிட்டவை ஒத்திகையாக நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் அனர்த்த பாதுகாப்பு பிரிவினர், போக்குவரத்துப் பொலிஸார், இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை தொண்டர்கள், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், இந்த ஒத்திகை நிகழ்வானது வைத்தியசாலை பணியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவம் வகையில் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.