மன்னார் மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,மாவட்டத்தில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதோடு, இன மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதே எனது மிக முக்கிய நோக்கமாக உள்ளது என மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இன்றைய தினம் திங்கட்கிழமை (16) காலை பதவியேற்ற மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் இன்றைய தினம் திங்கட்கிழமை(16) காலை தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன் போது மன்னார் மாவட்டச் செயலகத்தினால் புதிய அரசாங்க அதிகருக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்,பிரதேசச் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது அரசாங்க அதிபர் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,,,
எனது சொந்த மாவட்டமாகிய மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம்(16) திங்கட்கிழமை அரசாங்க அதிபராக மீண்டும் கடமையாற்ற எனக்கு வழி அமைத்த இறைவனுக்கு முதலில் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
மன்னார் மாவட்டம் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது.இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் என்னை மன்னார் மாவட்ட அரசாங்க அதிகராக நியமித்த அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
இந்த மாவட்டத்தின் சகல துறை சார் அனுபவங்களையும் ஏற்கனவே கொண்டுள்ளேன் என்ற அடிப்படையில்,இந்த மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, மாவட்டத்தில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதோடு, இன மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதே எனது மிக முக்கிய நோக்கமாக உள்ளது.
இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இங்கு கடமையாற்றுகின்ற சகல மதத்தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேசச் செயலாளர்கள், அனைத்து அதிகாரிகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோரது மேலான ஒத்துழைப்பினை நான் எதிர் பார்த்துள்ளேன்.
நிச்சையமாக அனைவரது ஒத்துழைப்புடனும் என்னுடைய பதவிக் காலப்பகுதியில் மன்னார் மாவட்டம் முன்னேற்றம் அடையும் என்கின்ற மிகுந்த நம்பிக்கையினை கொண்டுள்ளேன் என தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மன்னார் கமநல சேவை திணைக்கள உதவி ஆணையாளராகவும், மன்னார் பிரதேச செயலாளராகவும், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும், வட மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளராகவும் கடமையாற்றி உள்ளார்.யுத்த சூழ்நிலையான கால கட்டத்திலும், திடீர் அனர்த்த பாதிப்புக்கள் மத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரவும் பகலும் அயராது பாடுபட்டார்.அரச பணிகளுக்கு அப்பால் மனிதநேயத்துடனும் சேவையாற்றினார்.
அறிவு, ஆளுமை, வல்லமை, நிர்வாக திறமை, நீதி நடுநிலை, நேர்கொண்ட செயல் திறன், விவேகம், துணிவு கொண்ட ‘வீர பெண்மணியாக’ தனது கடந்த கால பணிகளை மேற்கொண்டார்.நீண்ட காலத்திற்கு பின்னர் மீண்டும் மன்னார் மாவட்ட மக்களுக்காக பணி செய்யக்கூடிய ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து மன்னார் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.