மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்று அறிகுறிகளுடன் இருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றைய நபருக்கான பரிசோதனை முடிவுகளை எதிர்பார்த்திருப்பதாகவும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வினோதன் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று பரவிய காலத்தில் இருந்து இன்று வரை மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை எந்த ஒரு கொரோனா தொற்று நோயாளரும் கண்டு பிடிக்கப்படவில்லை.
ஆனால்,மன்னார் மக்கள் சிலர் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் நிலவக்கூடிய உயர் வெப்பநிலை கொரோனா கிருமிகளை அழித்துவிடும் அதனால் பயம் கொள்ள தேவையில்லை என்று. அது உண்மையில் ஒரு தவறான நம்பிக்கை ஆகும்.
எமது மாவட்டத்தை விட மிக உயர்ந்த வெப்பநிலை உடைய மத்திய கிழக்கு நாடுகளில் கூட இந்த கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது.
ஆகவே வெப்ப நிலையால் இந்த கிருமி அழிந்து விடும். எனவே மன்னாருக்கு அல்லது வடமாகாணத்திற்கு இந்த நோய் தொற்று வராது என்று யாரும் நம்பினால் அல்லது கூறினால் அது மிகவும் தவறானது.
இன்னும் சிலர் பெருங்காயம் அல்லது வேறு சில பொருட்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பை அழிக்கும் என்று எதிர்ப்பார்த்து அதை உடலில் அணிவதாக தெரிகின்றது.
இதுவரை அவ்வாறான எந்த ஒரு தடுப்பு முறையும் கண்டறியப்படவில்லை. ஆகவே மக்கள் உறுதிப்படுத்தப்படாத தடுப்பு முறைகளை கையாளுவதை விடுத்து அரசாங்கம் மற்றும் பொறுப்பு வாய்ந்த வைத்தியர்கள், அரச அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி செயற்பட்டு தங்களையும், தங்கள் சார்ந்தவர்களையும் பாதுகாத்து கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது.
அத்துடன் கைகளை எப்போதும் கண், மூக்கு, வாய் ஆகிய பகுதிகளில் படாதவாறு வைத்திருங்கள். அத்துடன் நீண்ட பயணங்களோ , பண பரிமாற்றத்தில் ஈடுபட்டாலும் தயவு செய்து 20 நொடிகளுக்கு மேல் சவர்காரம் இட்டு கைகளை கழுவுங்கள். சவர்காரம் இல்லாத பட்சத்தில் அற்ககோல் உடைய கிருமி நீக்கிகளை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்துங்கள்.
இயன்றவரை வெளி நடமாட்டங்களை குறைக்குமாறும் யாருக்காவது இருமல், காய்ச்சல் , மூச்சு எடுப்பதில் சிரமம் அல்லது வெளிநாட்டில் இருந்து வந்திருந்தால் அல்லது வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பிருந்தால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையில் அல்லது, பொறுப்பான வைத்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறும் ஊரடங்கு சட்ட நேரமாயின் அவசர அம்புலன்ஸ் சேவையான 1990க்குஅழைத்து தெரியப்படுத்தினால் நாங்கள் வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.