Breaking
Sun. Nov 24th, 2024

மன்னார் – மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து, பௌத்த விகாரை அமைப்பது தானா நல்லாட்சி? என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை எதிர்வரும் 29ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளார்.

இந்த நிலையில் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு   அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

‘1991ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வரம் பகுதியை இராணுவம் அபகரித்த போது தமது வழிபாட்டுக்கு என அமைக்கப்பட்டது தான் இந்த பௌத்த விகாரை.

2009ஆம் ஆண்டிற்கு பின்னர் இராணுவம் அங்கிருந்த பிரதான படை முகாமை அகற்றிய போதும் இந்த பௌத்த விகாரையையும், பௌத்த மதகுருவையும் பாதுகாப்பதற்கு சிறிய இராணுவ முகாம் அமைத்து பாதுகாத்து வருகிறது.

எனவே இராணுவத்தின் ஒத்துளைப்புடனே பௌத்த விகாரை அமைப்பு நடை பெறுகின்றது.
வரலாற்றுப் புகழ் மிக்க திருக்கேதீஸ்வரம் சூழலில் இச் செயற்பாடு ஏற்புடையதா? 18.01.2012இல் பௌத்த மத அலுவல்கள் திணைக்களம் இந்த விகாரையின் பதிவை இரத்து செய்ததுடன் கட்டுமானப்பணிகளையும் நிறுத்தியது.

ஆனால் உங்கள் நல்லாட்சியில் தான் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இது சட்ட விரோத சனநாயக மீறல் அல்லவா? இதுவா நல்லாட்சி? தமிழ் மக்களின் பூர்வீக
வாழ்விடங்களில் கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்தி போலியான புனைவு பெயர்களின் மூலம் பௌத்த மயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்னகர்த்துகிறீர்களா?
எப்படி கதிர்காமத்தை சிங்கள முருகன் ஆக்கினீர்களோ அதே போல் காலப்போக்கில் திருக்கேதீஸ்வரத்தை சிங்கள சிவனாக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறீர்களா?
இது தானா பௌத்த தர்மம்? புத்த பெருமானின் தர்ம சிந்தனைக்கு எதிராக செயற்படுவது தான் இன்றைய பௌத்த சிந்தனையா? பாவம் புத்தர் உயிரோடு
இருந்திருந்தால் உங்கள் எல்லோரையும் அழித்து விடுவார்.

புத்த பெருமானின் தர்ம சிந்தனைகள் உலக நீதிக்கு வழிகாட்டியது.
ஆனால் இன்றைய பௌத்தம் இனச்சுத்திகரிப்பு செய்கிறது.
சட்ட விரோதமாக தனியாருக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட சட்ட விரோதமான விகாரை திறப்பதற்கு தமிழ் மக்களின் வாக்குக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகிய நீங்கள் உங்களை தெரிவு செய்த மக்களின் விருப்புக்கு மாறாக நீங்கள் திறப்பு விழாவிற்கு வருவது தார்மீக அடிப்படையில் நியாயம் தானா?

ஏன் உங்கள் மனச் சாட்சியிடம் கேளுங்கள் தமிழ் மக்களின் அறம் சார்ந்த போராட்டத்தை தான் அடியோடு அழித்து விட்டீர்கள். இனம் சார்ந்த உணர்வையும் நசுக்கி விடப்போகிறீர்களா?

நீங்கள் தமிழ் தலைமைகளை ஏமாற்றலாம் ஆனால் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. என்பதை புறிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். நீங்கள் உண்மையில் அறம் பேசுபவராக இருந்தால் சட்ட விரோத விகாரை திறப்பு விழாவிற்கு வருவது ஏற்புடையது அல்ல.
உடனடியாக பணிகளை நிறுத்த வேண்டும் எக் காலத்திலும் பௌத்தர்கள் வசிக்காத இடத்தில் எதற்கு விகாரை? திருக்கேதீஸ்வரப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியின்றி ஒரு சிறு குழியைக்கூட அகழ முடியாது. ஆனால் விகாரை கட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது.

இது தானா பௌத்த சனநாயகம். மேட்டிமை வாத மேலாதிக்கத்தை தான்தோன்றித்தனமாக தமிழர் பிரதேசத்தில் இராணுவ உதவியுடன் செயற்படுத்திக்கொண்டு உலகத்தை ஏமாற்ற உதட்டளவு நல்லிணக்கம் பேசுகிறீர்களே! எப்படி நல்லிணக்கம் ஏற்படும்.

எனவே இந்த சட்ட விரோத விகாரை திறப்பு விழாவில் சனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நீங்கள் கலந்து கொள்வது ஏற்புடையது அல்ல.
எமது நியாய பூர்வமான வேண்டுகையை புறக்கணித்து குறித்த திறப்பு விழா நடை பெற்றால் சனநாயக ரீதியில் கறுப்பு கொடியேந்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்பதையும் தங்களிற்கு வினயமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *